எல்மியா (கவிதை) - சிவநிறைச்செல்வி
எல்மியா
(பேரொளியின் காதலி)
முன்னுரை
சடங்குகளின் விதிமுறை வழி நிற்க ஒவ்வாத சராசரியினின்று கழன்ற ஒரு பெண்ணின் கொதிப்பின் துளிகளே இக்கவிதைகள்.
உரையாடி தீர்க்கமுடியாத தீரா கோபங்களை, எழுத்து வழி எக்காளமிட முயன்றதன் விளைவே இந்நூல்.
பேரொளியின் மீது காதல் கொண்ட இருள் தேசத்து மின்மினி இவளின் சமிக்ஞைகளை இதோ நீங்களும் வாசித்து உணரும் பேரவாவில்....
அன்புடன்,
சிவநிறைச்செல்வி.
என்னுரை
"காணி நிலம் வேண்டும்" என்று தன் கனவு இல்லத்தின் திட்டவரைவை பராசக்தியிடம் முறையிட்ட பாரதி போல,
என் உள்ளத்து எழுந்த எழுச்சிகளை எல்லாம் பிரபஞ்சத்திடம் புலம்பித் தீர்க்க முடிவெடுத்தபோது,
அவை கவிதைகளாய் உருப்பெற்றன.
இந்நூலின் ஏதோ ஒரு கவியேனும் உங்கள் உள்ளத்தின் திரையை சற்றே விலக்க நேர்ந்தால்,அதுவே இந்நூலின் வெற்றியாகும்.
________________________________________________
உள்ளடக்கம்
1.தொலைந்த பொக்கிஷம்
2.நிச்சயிக்கப்பட்ட நடிப்பு
3.உள்ளக்குமுறல்
4.ஏன்?
5.விமர்சனக்கூளம்
6.தனிமையின் காதலி
7.முறிந்த கிளை
8.முற்றுப்புள்ளி×முடிவிலி
9.நிலவும் நானும்
10.நிலைபெற்ற பிரபஞ்சம்
11.ராஜாளிப்பெண்
12.அலறல்
13.கலைந்த கவிதைகள்
14.கழன்ற சராசரி
15.பளீர் சிரிப்பு
16.மாயா தீபம்
17.சுதந்திரம்
18.எரியூட்டி
19.கவிதைச்சிறகுகள்
20.தெளிவே மகாபாவம்
21.அலசல்
22.தக்கவைக்கும் இறை
23.உறங்கும் உள்ளம்
24.எழுத்து எனும் தவம்
25.நேர்மறை
26கட்டற்ற மை
27.இறை கசிவு
28.ஒவ்வாமை
29.கல்பனா தூரல்கள்
30.கலையின் தாபம்
31.பேரவா!
32.என்னுள் பாரதி
33.பழங்கூட்டம்
34.கரிக்கும் புன்னகை
35.நன்றியுணர்வு
36.நான் அறு!
37.நிகழா நிரல்
38.முதல் தனிமை
39.இதம் எது?
40.எது கவிதையாகிறது?
41.முறிக்கும் புன்முறுவல்
42.சுமை உலர்த்தல்
43.வானவில் கண்ணாடி
44.நவநவமாய் விரயம்
45.இனி இம்சிப்பதற்கில்லை
46.அரிக்கும் ஞானம்
47.பிறவி
48.எண்ணமே வண்ணம்
49.பேரின்பம்
50.இருதலைக்கொள்ளி நிலை
51.ஞானம் என்றால்?
52.இறையின் நெசவு
53.சகியே!
54.மக்கிய மரபு
55.கொடும்பசி
56.எழும்பும் மெளனம்
57.சரீர கம்பளி
58.முன்முடிவுகள்
59.நச்சுக்கொட்டிகள்
60.சருகே சரணம்
____________________________________________
1.தொலைந்த பொக்கிஷம்:
என்று நீங்கள் எண்ணும்போதெலாம்...
இறைவனின் விதிக்குறிப்பில்
நான் ஜெயித்ததாய் எழுதப்பட்டது!
உங்கள் வாட்டமான முறைப்புகளுக்கு
பழகிவிட்ட எனக்கு,
எப்போதேனும் பூக்கும் உங்கள்
முலாம் பூசிய புன்னகை
விநோதமாய் தெரிகிறது!
உங்கள் உல்லாச கேலிகள்
என் பேரமைதி வீதியின்
கிழக்கை குறுக்கிடுகின்றன....
எனினும் நீட்டி முழங்கி துளைக்கும்
பெருஞ்சூரியனின் கருணையில்
வாழ்கிறேன்!
பொருளற்ற யாப்புக்கவி என
அள்ளிவீசிச் செல்கிறீர் விமர்சனங்களை...
வடிவமைக்கப்பட்ட உங்கள் எந்த வனைப்பிலும் சிக்குவதே இல்லை
உணர்வூட்டப்பட்ட என் புதுக்கவிதைகள்!
நான் உங்களிடம் வேண்டுமென்றே யாசிக்கிறேன்,
எதற்காக தெரியுமா?
'நான் உங்களை சார்ந்துள்ளேன்'
எனும் பொய்யை மெய்ப்பிக்கத்தான்!
என்னிடம் நெடுநேரம் கதைக்கிறீர்கள்...
என் பெருமோனத்தில் கிடைத்த
பொக்கிஷங்களை எல்லாம் நான் தொலைத்துவிடுகிறேன்!
__________________________________________________
2.நிச்சயிக்கப்பட்ட நடிப்பு
வேடமிடத் தெரியாமல்
வேற்றுகிரகவாசி போல்
அள்ளாடுகிறேன்
ஒவ்வொரு முறையும்
இந்த முகமூடிகளின்
விஷம் தடவிய இன்முகங்களை
மெய்யென்று நம்பி ஏமாறுகுறேன்...
நிச்சயிக்கப்பட்ட நடிப்பின் மிளிர்வினில்,
நீர்த்துப்போயின என் நிஜமான புன்னகைகள்!
_________________________________________________
3.உள்ளக்குமுறல்
மனத்தினுள் முட்டி எத்தனிக்கும்
பகுத்தறிவுத் தீயை
உள்ளழுத்தி வேகிறேன்....
இந்த கொடுந்தீயின் குமுறல்
உள்ளத் திடலை எரித்து கருக்குகிறது....
இந்தப் பொருமலின் புகையை
நான் கவிதைகளாக்கி
கக்கிக்கொள்கிறேன்!
_________________________________________________
4.ஏன்?
ஏன்? என்று கேட்ட ஒரே
குற்றத்திற்காக,
நீங்கள் என்னை தூக்கிலிடப்பார்த்தால்....
என் மரணத்தின் பிற்பாடும்
என் 'ஏன்?'கள் எதிரொலிக்கும்!
என் மரணத்தால் ஒரு ஏனேனும் பிறக்குமெனில்!
__________________________________________________
5.விமர்சனக்கூளம்
பிரபஞ்ச மேடையில் எனக்காக விரிக்கப்பட்டிருந்த
சிவப்புக்கம்பளத்தை,
உங்கள் விமர்சனக் கூளங்களால்
குப்பை செய்யப்பார்த்தால்
சரியா?!
உங்கள் உலகம்
30 கி.மீ எல்லைக்குள்ளேயே
முடிவடைகிறது என்பதற்காக,
நான் வசிக்கும்
எல்லையே அற்ற பிரபஞ்சவெளிக்கு
வேலி போட நினைக்கிறீர்களே!?
_________________________________________________
6.தனிமையின் ❤️ காதலி
தனிமை அவளை நேசிக்கிறது,
ஆன்மாவின் தகிப்பை
அது தகிக்கிறது.
4 சுவர்களுக்குள் சூக்கும
வானவாயில் கட்டி அது புகுத்துகிறது.
எண்ணக் கண்ணாடியின்
உடைந்த பிம்பங்களை
அது ஒட்டுகிறது.
கன்னத்தின் சோக ரேகைகளை
பின்ன பின்னமாய் அது அழிக்கிறது!
உள்ளெழுந்த உற்சாகத்தை
துளிவிடாது அது உமிழ்கிறது!
அவள் தன்னை தேடும்போதெலாம்,
அவளை அது வாரியணைக்கிறது!
ஒட்டிலாத உறவுகளினூடே ஒட்டிப்பிறந்து
உறவாடும் தனிமையின் காதலிதான் இவள்!
___________________________________________________
7.முறிந்த கிளை
ஒரு பெருமரத்தினின்று
முறிந்துவிட்ட ஒற்றைக்கிளையென
தனித்திருக்கிறேன்...
ஒட்டவும் முடியாமல்
ஓடவும் முடியாமல்
நகர்வின்றி கிடக்கிறேன்...
உன் பேரொளி எனும்
காட்டாற்று வெள்ளம்
எனை வந்து அடித்துச் செல்லாதோ!?எனும் பேராசையில்
இன்னும் மக்காமல் இருக்கிறேன்!
__________________________________________________
8.முற்றுப்புள்ளி × முடிவிலி
ஞானத்தின் வழியறியாது குழம்பிய
காலம் அது....
கோபுரங்களின் நிழலில்
என் பக்தியின் வெப்பத்தை
காயவைத்துக் கொண்டிருந்த
பருவம் அது....
என்ன இப்போதெல்லாம்
நான் புராண பூசைகளை
வெறுத்துவிட்டேன் தான்....
எனினும் நிர்பந்தக் கயிற்றின்
சடங்கு முடிச்சுகளுள்
கட்டவிழா கதைகளை
கோர்த்துக்கொண்டுள்ளேன்...
தேகத்துள்ளான திரி தூண்டத்தெரியாது
திணறிக்கிடக்கிறேன்
இப்போதும்...
ஈவதற்கு நீட்டப்பட்ட
என் கரங்கள்
வலுக்கட்டாயத்தின் பெயரில்
வலுவிழந்து கிடக்கின்றன...
கண்கள் வழித்தடங்களை
யூகித்தப் பின் கூட
நான் தடம் மாறி
பயணிக்கிறேன்....
காற்புள்ளியின் கால்வெட்டி,
முற்றுப்புள்ளி வைத்தனர்.
மூளுகின்ற பெருஞ்சினத்தால்
வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியை
முடிவிலியாக்கி தொடர்கிறேன்.....................................................
___________________________________________________
9.நிலவும் நானும்
நான் மகத்தான கனவுகளில்
வாழ்ந்துகொண்டு,
கண் முன்னான எளிமையான நிஜங்களை கொன்றுக் கொண்டிருந்தேன்,
அந்த நேரம்,
அந்த வானத்து அசரீரி என
எங்கோ ஒரு மூலையில்
நாய்களின் ஓலங்கள்
எனக்கு உச்ச ஸ்தாயியில்
வகுப்பெடுக்கத் தொடங்கின..
மனித நிழல்கள் தீண்டாத
அந்த வீதியை,
என் நிழல் நீவிக்கொண்டிருக்க,
மேகக்கூட்டம் முராரி வாசித்தபடி
நகர்ந்தன.
எனினும்,
கப்பிய இருள் கிழித்து
நிலா மட்டும் இளித்துக்கொண்டிருந்தது
என்னோடு!
_________________________________________________
10.நிலைபெற்ற பிரபஞ்சம்
எனக்காய் நான் வாதாடி இருக்க வேண்டிய தருணம் அது,
என் மனமோ
சமாதானக் கொடிக்கட்டிக் கொண்டது.
கொடுஞ்சினத்தை
மென்றுக்கொண்டிருந்த என்
பற்களின் இடுக்கில்
இரத்தத்திற்கு பதில்
இரக்கம் ஊறிக்கசிந்தது.
வெளிவர துடித்த உணர்ச்சிப்பெருக்கெலாம்,
உள்ளிருக்கும் ஏதோ ஓர்
ஓட்டைவழி வடிவது போல் உணர்ந்தேன்.
"உள் கடந்தால்
நிராதார நிலையில்
நிலைபெற்று இயங்கும்
பிரபஞ்சம்......"
தவ வகுப்பில் குருவின்
குரல் ஓங்கி ஒலித்தது.
___________________________________________________
11.ராஜாளிப் பெண்
ஆகாய வீதி அளக்கும் ராட்சத ராஜாளியென திரியப் பிறந்தவள்;
'இதோ இன்னும் கொஞ்ச காலந்தான்,
உரிமச் சிறை விடுத்து
ராட்சத சிறகு விரித்து
வந்து விடுவேன்,
விடியலின் தீண்டல் மிக அருகில் தான்!!!'
என்றாள் வானிடம்!
__________________________________________________
12.அலறல்
சுகிக்கிறாள்,
மறுகணமே
நோகிறாள்.
இரைச்சலினூடே
கசியும் அமைதியின்
அலறலென
யாரும் கேளாமல்!
__________________________________________________
13.கலைந்த கவிதைகள்
என்னிடம் கத்தியை
தைரியமாய் வழங்கிடும் கைகள்...
புத்தகங்களை தர மறுக்கின்றன!
காய்கறி கறையாகிய கத்தியின் பிசுபிசுப்பை கழுவிட கழுவிட,
கலைந்துபோயின என் கவிதைகள்!
____________________________________________________
14.கழன்ற சராசரி
பெருந்தலைவர்களைப் பற்றி
பெருமை பேசும்போதெல்லாம்,
என் வீட்டார் பயந்துபோயினர்!
நானும் சராசரிகளினின்று
கழன்றுவிடுவேனோ என்று!
சுய தேடலை தொடக்கிய பின்
சிந்தனை மாற்றம் நிகழ்வது இயல்பே,
ஆனால்...
நீ எதையுமே வாசி,
வாசித்த வார்த்தைகளாய் வசிக்காதே என்றால் நியாயமா??
நீங்கள் உறங்குகிறீர்கள்
என்பதற்காக,
என் விழிப்பை பரிகசித்தல் முறையா?
__________________________________________________
15.பளீர் சிரிப்பு
நீங்கள் வெட்டி அரட்டைகளுக்குப் பழக்கி என்னை மகிழ்வாக்க
முயற்சிக்கிறீர்கள்,
பெருமோனத்தில் நான் உள்ளூர பளீரென்று சிரிக்கிறேன்!
__________________________________________________
16.மாயா தீபம்
நான் நடக்கையில்
எனை பின் தொடரும்
நிலவு போல,
பெளதீகக் கடமைகள்
எனை அழைக்கின்றன!
நிற்க நேரமில்லாத உலகில்
ஏற்றப்பட்ட மாய(யா) தீபங்களுள்
ஒன்றாய் நானும்!
__________________________________________________
17.சுதந்திரம்
கற்பிதங்கள் எனக்கு சலித்துவிட்டது
கற்பனைகளில் தான் நான் கைவீசி நடக்கிறேன்
_________________________________________________
18.எரியூட்டி
என்ன பெரிய பகுத்தறிவுக் கொள்கை என்கிறீர்!!??!
உப்புசப்பற்ற பிடிவாதங்களுக்கு
பழகிப்போன பழமைப் பாசறையின்
மாந்தர்களே!!!
என் அர்த்தமுற்ற கொள்கை பிடிப்பிற்கு நீங்களே எரியூட்டி
ஆவீர்கள்!
____________________________________________________
19.கவிதைச்சிறகுகள்
தனிமையின் காதலியாகிவிட்ட எனக்கு கவிதைகளே மிகவும் மிருதுவான தொடுதலை தருவன!
கவிதைகளில் நான்
கொஞ்சம் இளைப்பாறிக்கொள்கிறேன்!
ஏன் ? என்ன? என்று கேட்டபோதெலாம் சுலிப்பையும் சலிப்பையும் சம்பாதித்தேன்!
பாகுபாட்டினாலும் சடங்குகளாலும் பீடிக்கப்பட்ட நான்,என் பறத்தலை மறந்தேபோயினேன்!
என் சிறகுகளை நான் ரகசியமாய் செப்பனிட்டுக்கொண்டே இருக்கிறேன்....
என்றேனும் காற்றின் திசை என் பக்கம் திரும்பிடினும் திரும்பாவிட்டாலும் கூட,
நான் என் சிறகுகளை மூடப்போவதே இல்லை என்னும் நிலைக்காக காத்திருக்கிறேன்!!!
அதோ அந்த மின்னும் விண்மீனின் தடத்தில் நான் மிளிர்வேன் ஒருநாள்!
ஆட்சேபனைகளுக்கு ஆயிரம் முறை ஆறுதல் கூறி அடங்கும் மனத்திற்கு,கவிதை பெரும் ஆசுவாசத்தை தருகிறது!
__________________________________________________
20.தெளிவே மகாபாவம்
உள்ளொன்றும் புறமொன்றுமாய்
நிறம் மாறத்தெரியாத
வெற்றிடத்தேக்கம் நான்...
புகை கவ்வியதோர் சாலையின்
நீராவி ரேகைகளென
நான் ஒன்றுமில்லாது போகிறேன்...
உறைபனிச்சிலை ஒன்று
வெப்பத்தில் நனைவதைப்போல
இதோ நானும் வடிவிழந்து வருகிறேன்...
தேள் கொடுக்கைச் சீண்டி
தேனெடுக்கப் நேர்கிறேன்...
முடியாதுதான் எனினும்,
நான் மறுபடி மூர்ச்சையாகப் பார்க்கிறேன்...
மயக்கத்தினின்று தெளிவதே
மகாபாவம் என்றுணர்ந்தேன்!
__________________________________________________
21.அலசல்
கபட வேடங்களின் சாயங்களில்
ஒளிந்து கொண்ட சாயல்கள் போல,
நான் பிரிதொருமுறை
அலசுகிறேன் உன்னுள்ளான என்னை!
__________________________________________________
22.தக்கவைக்கும் இறை
மீட்டெடுத்த என்னில்
மீட்டுதற்கரிய மீள்முடிச்சுகள்
நீளா அலைநிலையில் அவிழ்ந்தபடி!
பேரின்பை அளவிடுகிறேன் பெருந்துன்பின் பார்வை கொண்டு!
இறை என்னை தக்கவைக்கிறது
ஆதலால், நான் சுவாசிக்கிறேன்!
________________________________________________________________
23.உறங்கும் உள்ளம்
மாயவண்ண கனவுகளில் உழன்று உள்ளுறங்கும் உள்ளமே,
ஏன் நீ விழிப்பிற்கு போய் அஞ்சி அலறுகிறாய்...
உனக்கு வண்ணங்கள் விருப்பமென்றால்,
வெளிச்சங்களும் பிடிக்கும்தானே!
அவை கனவுகளைப்போல் சொல்லிக்கொள்ளாமல் கலைவதில்லை!
எழுமின்!
_______________________________________________________
24.எழுத்து எனும் தவம்
நீள் வாசிப்புகளையே விரும்புகிறேன்,
ஆனால் நீளா கவிதைகளில் தான் நிலவுகிறேன்!
என்னால் மெளனத்தின் கூச்சலையும் துல்லியமாய் திரட்டமுடிகிறது!
ஆகவேதான், நான் எழுத்தை நேசிக்கிறேன்;
எழுத்து எழு(து)வதும் மெளனத்தினின்று தான்!
அடர்வைச் சொரியும் ஒரு வரி போதும்,
ஆகச்சிறந்த க(விதை)க்கு!
இயற்கையின் முணுகல்கள்,
உள்ளம் யாத்த கவிதைகள்
___________________________________________________________________
25.நேர்மறை
முன்னொரு நாள் யாரோ ஒரு விமர்சகர்
என் எதிர்மறை கவிகளை எண்ணி கவலையுற்றார்,
அந்த முகம் தெரியாத விமர்சகருக்காய் தான் நான் இப்போது முழுவதுமாய் 'நேர்மறையாகி இருக்கிறேன்' என் கவிதைகளோடு!
_______________________________________________________
26.கட்டற்ற மை
எதை எழுதவேண்டும் என்று எனக்கு நீ நிர்பந்திக்காதே,
கட்டற்ற மையினை என் பகுத்தறிவு ஈகிறது உன் செலவு ஏதுமல்ல!
___________________________________________________________
27.இறை கசிவு
என் சுயபுணர்ச்சிகள் நசிவுறுகின்றன,
உள்ளூரிய உன்மத்த இறையின் கசிவினால்!
____________________________________________________________
28.ஒவ்வாமை
உலகியலின் இரைச்சல் எனக்கு ஒவ்வாது, ஆதலால் உலகு அமைதி உறட்டும் நான் இயங்குவதற்காய்!
____________________________________________________________
29.கல்பனா தூரல்கள்
காரியங்கள் புரியாதபோது காரணங்களில் கரைத்துப்போகும் கல்பனா தூரல்கள்!
நிதர்சனங்களின் பொய் கால்களால் எட்டவேமுடிவதில்லை கற்பனையின் மாளிகைதனை!
நான் சுதந்திரத்தின் சூடு குறையாத சுவாசமாவேன்...
எனை குளிர்விக்கும் ஆசைகளின் ஈரத்தில் நான் மேலும் சூடே(ற்)றி சுடர்கொள்வேன்!
""*விதிக்கோலத்தின் புள்ளிகள் மதி நுட்பத்தின் கணக்கீடுகளில் புலப்படுவதில்லை!***
நிசத்தின் அகதியாகிய என்னை அரசியாக்கி அரவணைக்கும் எழுத்துலகு!
நீட்டி முழங்கிடாத என் இரு வரிகளுக்குள் தான் நான் நீந்திக்கொண்டிருக்கிறேன்!
________________________________________________________________
30.கலையின் தாபம்!
அங்கீகரிக்கப்படாத என் கவிதைகள் யாவும் ஆக்கி ஆறிய பதார்த்தங்களாய்
சுவை மிகுந்திருந்தும் அவற்றை வகைப்படுத்தும் ரசிகனை அவை இன்னும் பெறவில்லை
கலையின் தாபத்திற்கு கிடைக்காத போகமென மேடைகளுக்கான காத்திருப்புகள்
மென்று விழுங்கிவிட்ட சுய விமர்சனங்களின் செரிக்காத சொச்சங்கள்
வெளியிடையில் மின்னிய கற்றையொளி மின்மினிகளின் விழியிருள் மீதங்கள்
தேக்கங்களில் திரைந்து மறைந்து பொதிந்த புதையல் பூரிப்புகளின் விடுதலை நாள் என்றோ?!
_______________________________________________________
31.பேரவா!
ஏ! தலையசைக்கும் தோட்டத்து வாழையிலைகளே நீங்கள் என் குரல் கேட்டு 'உம்' கொட்டுகிறீரா?
ஏ! மூக்கறைக் காற்றே என் சுயத்தின் பிம்பங்களை நகல் எடுத்து பரப்புங்களேன்
ஓ! ஈர மண்ணே என் நெஞ்சின் சுரத்தை நீ வந்து ஆற்றுப்படுத்தேன்
ஓ! தூர மேகங்களே என் சலனங்களை சலவை செய்ய உங்கள் வெண்தேகம் தாருங்கள்
ஏ! கோல மாவு விற்பவனே உன் வியாபார ஒலிப்பெருக்கியோடு என் கனவுகளை விற்றுத்தீரேன்
என் நீட்சியான பக்கங்கள் முடிவற்று தொடர்கிறது என்னதான் செய்யட்டும் கனவுகள் தொடர்கையில்
கூரிட்டு நிற்கும் தென்னங் கீற்றின் முனைகள் என் ஓலத்தை உறிந்து எழுதட்டும் கவிகளாய்
ஒரு தனிக்காட்டின் இடையே தொடரும் நெடுஞ்சாலை என நான் மட்டும் என் கனவுப்பயணத்தின் பாதையில்
அரிவாள்களை சாணம் தீட்டும் அந்த கைகள் என் ஏக்கங்களை சன்னமாக்கி செல்லட்டும்
என் பேரிரைச்சல் பெரும் முழக்கம் ஆகட்டும்
என்ன செய்ய நான் பிரசுரிக்கும் படைப்புகள் இன்னும் சேர்பவர்களை அடையவே இல்லையோ எனும் பேரவா!
_______________________________________________________
32.என்னுள் பாரதி
நெஞ்சு கொதிக்கிறது
நஞ்சு படர் நீரென
பொங்கி எழும் அடக்குமுறை
கண்ணீர் குடைகிறது
வீறுகொண்டு நேரே நின்று
அடங்கோம்! இனி ஆள்வோம்!
என வீரத்தோடு முழங்கிடவே
நெஞ்சு கொதிக்கிறது!
ஆற்றல் எழுகிறது
ஆதிக்கம் செயும் மூடர்தமை
அறிவுப்படுத்தி அன்பு புகட்டி
ஐயோ! போதும் துன்பினி வேண்டா
கோதி தவழும் காற்று போலே
விரிவோம்! இனி உயர்வோம்
என உறக்கங் கலைந்தோட
ஆற்றல் எழுகிறது!
கண்ணியம் நிறைகிறது
உளக்கனல் மேல் மூள்கிறது
முன்னை வாயிலா பெண்டிராய்
இன்றை மகளிர் இருத்தல் தவறு
பிழை உணர்ந்தோம் இனி விடோம்
பெண்ணியம் எங்கள் உரிமை
என கூவிடவே பண்பாடிடவே
கண்ணியம் நிறைகிறது!
___________________________________________________________
33.பழங்கூட்டம்
வீட்டைக் கழுவுது ஒரு கூட்டம்
நோட்டை படைக்குது மறு கூட்டம்
தூசு துடைக்குது சில நோட்டம்
காசு மறைக்குது பதராட்டம்
ஆயுதம் கொஞ்சுது பூசை நேரம்
அதுவரை மறந்த கடவுளை தேடுது
அங்கமெலாம் விபூதி பூசுது
குணங்கெட்ட கோனாருகள் அன்றுமட்டும்
கோனார் எடுத்து பக்தி பாடுது
மனம் கழுவாது இக்கூட்டம்
புவி ஒருகுடை என்னாது இதன் வாட்டம்
ஆயிரம் வேண்டுதல் அடுக்கிவைத்து
கற்பூரம் அணையாத பூசையிலே
பகுத்தறிவை கரிக்காக்கிய பழங்கூட்டம்!
____________________________________________________________
34.கரிக்கும் புன்னகை!
நான் என் தாய்கூட்டின் வாசத்தின் போதான சிலாகிப்பான பயணங்களையே விரும்புகிறேன்
என் சிறகுகள் அப்போதெல்லாம் கனத்தினை தந்ததில்லை
மிக சுலுவாக வலசைப் போன அந்த தருணங்கள் என் எண்ணங்களின் பரவசச்சொட்டுகளில்
காலச்சிறையின் கம்பி நிழல்களில் என்று நான் சிக்குண்டேனோ அன்றிலிருந்து மட்டும் என் எல்லா திசைகளும் இருளப்பி நிறைந்தன
யாது செய என்றென்னி என் சிறகுகளை படபடத்து சிலுசிலுத்து மேலேகிட எத்தனித்தேன்
ஆனால் என் உடல் கனத்துவிட்டது,
எல்லைகள் எழும்பிவிட்டிருந்தன
யாரோ ஒரு வழிப்போக்கனின் காலடித்தடத்தில் நான் சிக்கிக்கொண்டதை உணர்ந்தேன்
என் நீட்சியான தேசாந்திரி நாட்கள் என் நினைவுத்தாளில் ஈரம் காயாத மையாய்
கனவுக்கோப்பை நிரம்பி வழிந்திடும் இவ்வேளையில் முள் வேலிகளின் இடுக்கில் மாட்டிக்கொண்டேன்
என்னால் வானத்தை பார்க்கமுடிகிறது ஆனால் சிறகுகளை அசைக்கமுடிவதில்லை
என்னால் என் வாகான பாதைகளை அடையாளம் காணமுடிகிறது ஆனால் என் அடைவிடங்கள் அடைபட்டுக் கிடப்பது தெரிந்தது
நான் ஒன்றும் மீனுமல்ல எதிர்நீச்சல் போட
இந்த பழகிடாத உப்புக்காற்றின் சுழல்விரிவுக்குட்பட்டு என் இனிப்பான புன்னகையும் கரிக்கின்றது
என் கால்களோ சேற்றுப்பசையில் மாட்டிக்கொண்டன
என் விழிகள் மட்டும் கனவுகளின் காலையில் விடிந்து முடிகிறது!
_____________________________________________________________
35.நன்றியுணர்வு!
நன்றியுணர்வு மேலெழுந்து ஊற்றுகிறது கண்ணீராய்....
என் பிரபஞ்சத் தாய் விழி துடைத்து கோதுகிறாள் காற்றாக....
நான் நெகிழ்ச்சியில் நிறைந்தபோது நட்சத்திரப் பட்டாளமாய் தன் இருப்பை சிரிப்பாய் காட்டுகிறாள்...
நான் ஊறிப்போன அன்பின் அணுக்கத்தை அளந்துகொண்டிருந்தேன்...
அவளே என்னுள் இருந்து வார்த்தைகளை கோர்த்து வார்த்துக்கொண்டிருந்தாள்...
நான் சரீர உலகை தாண்டி பேசிக்கொண்டிருந்தேன்...
என்னுள் சகல அகிலங்களின் ஆற்றலை ஏற்றிக்கொண்டிருந்தாள் அவள்....
நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் முணகிக்கொண்டிருந்தேன்...
அவள் பூரிப்பின் புன்னைகையாய் என்னுள் இன்னும் குடிபுகுந்து கொண்டாள்...
நான் அணுக்கமாய் அவளை தாயே என்றழைத்து கதறினேன்...
என் அணுக்களின் அடைசலிலும் ஆற்றலாய் அமர்ந்து அசைந்துகொடுத்தாள்...
நான் உருகி மருகி வார்த்தை தடுமாறி உரையாடினேன்....
என்னை அணுகி நுணுகி பேரறிவாய் இசைந்து நின்றாள்....
நான் கோடி கோடி கனவுகளை ஸ்பரிசத்தால் மொழிபெயெர்க்க முயன்றேன்....
அவளோ தண்மையின் திறத்தால் என்னை துணிவாக்கி தேற்றினாள்...
என்னால் ஆவதொன்றும் உண்டோ என்று கேட்டிருந்தேன்...
நானே நீ...நீயே நானாகி...நானே நீயாகிய பின்னும் ஏதேனும் இனி ஆக வேண்டியதும் உண்டோ என்றாள்....
நான் வண்ண நினைவுகளை பட்டியலிட்டு கிடந்தேன்...
அவள் பரந்த விண்ணின் இணைப்பில் நிறைத்தாள்....
நான் எந்த நாளும் உன் நாளே என்றேன்...
அவளோ " நாளை நமதே! இந்த நாளும் நமதே!" என்றாள்...
தன்னை நானாக்கி....
என்னை தானாக்கி....
உய்விக்கும் உயிர்மயமே,
செழிப்பே! சுகமே!
ஆற்றலே! அழகே;
அன்பே! அறிவே!
நலமே! நிறைவே!
நிம்மதியே! நித்தியமே!
நான் எப்படித்தான் நன்றியுரைப்பேன்...
நன்றி....நன்றி....நன்றி.....!!!!!
அனந்த கோடி கோடி கோடி நன்றிகள்....
என் பிரபஞ்ச தாயே!!!!!!!!
_______________________________________________________________
36.நான் அறு!
நான் அகிம்சையை பழகிவிட்டேன்,
ஆதலால் ஒருபோதும் இம்சைகளில் இளைப்பாறுவதில்லை!
நானின்றி அமையாது இவ்வுலகியல்,
நானற்று அமையுமே இவ்வுலகியக்கும் அன்பு!
_______________________________________________________________
37.நிகழா நிரல்
தன் ஊன் தீண்டிய தூபக்காற்றை
ஊமை ஓடம் ஏசுவதற்கில்லை,
நிசியின் நிச்சலன மோனத்தை
கலைக்காதபடி துடுப்புகள்
தீண்டிய நீரின் சலசலப்புகள்...!
கூட்டத்தின்
எழுத்தாணி ஓசைகள்
என் எழுத்தின் மெளனத்தை
கலைப்பதற்கில்லை!
பட்டப்பகலின்
படப்பிடிப்பில்
பால்நிலா
பல் இளிப்பதில்லை,
இளித்தாலும்
தெரிவதில்லை!
__________________________________________________
38.முதல் தனிமை
நீங்கள் முதல்முறையாக தனிமையை சந்திப்பவராயின்,
பல மீட்புகளின் இம்சிப்புகளுக்குள் இளைப்பாறிக்கொள்ள பழகவேண்டியிருக்கும்!
______________________________________________________________
39.இதம் எது?
நேசிப்புகளின் நேர்ச்சியினையே நாம் அன்பு என்கிறோம்,
எனவேதான் காயங்கள் பரிசாகின்றன!
எது முப்போதும் யாவர்க்கும் உள்ளதோ அதுவே கருணை ஆகிறது,
இங்கு இதங்களே ஈயப்படுகின்றன!
__________________________________________________________________
40.எது கவிதையாகிறது?
ஓர் அனுபவாதீதத்தின்
பெரும் பிரயத்தனமற்ற
உள்எழுச்சியே கவிதையாகிறது!
_____________________________________________________________
41.முறிக்கும் புன்முறுவல்
புகழில்...
புளித்துப்போன பூரிப்புகளில்...
நான் ஒருபோதும் லயிப்பதில்லை!
வர்ணஜால வலைவிரிப்புகளுள்
சிக்கிடாத வலசைப்புள் நான்!
அட்சதை தூவி எனை நீங்கள் அங்கீகரிக்காவிடினும்,
எனை அணைத்த காலத்தின் கதகதப்பில் வாழ்வேன் எந்நாளும்!
என் உச்சபட்ச தன்னம்பிக்கை
உங்கள் கண்களுக்கு அகந்தையாக தெரிந்திடின்,
அதற்கு நான் ஒன்றும் பொறுப்பல்ல...
உங்கள் பார்வையில் தான் கோளாறு!
பொறாமை மேலிடும் உங்கள் கைக்குலுக்கல்களில் தான்,
என் பேனாமுனையை நான் கூர்தீட்டிக்கொள்கிறேன்!
உங்களின் உள்ளீடுகளற்ற விமர்சனங்களை நான் எள்ளுகிறேன் என்
புன்னகையால்.
____________________________________________________________
42.சுமை உலர்த்தல்
என் சிறகுலர்த்தல்களை
நீங்கள் வெறுக்கிறீர்கள் என்பதற்காக நான் நிறுத்தப்போவதில்லை!
நான் அவ்வப்போதைய ஈரங்களை
இறக்கிவிடுவேன்,
உங்களைப்போல பாரம் விரும்பியல்ல நான்!
____________________________________________________________
43.வானவில் கண்ணாடி
நீங்கள் பச்சோந்திகளாக இருப்பீர்களாயின்,
நான் வானவில் கண்ணாடியின்
சொந்தக்காரியாவேன்!
___________________________________________________________
44.நவநவமாய் விரயம்
நீங்கள் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் விடயங்களில் வரவு பார்ப்பதை விட்டுவிட்டு,
இழுத்து வாரிக்கொண்டு எதை எதையோ சிக்கனப்படுத்துவதாய் எண்ணிக்கொண்டு ஆற்றலை நவநவமாய் வீணாக்குவதிலேயே கவனம் செலுத்துகிறீர்கள்!
_______________________________________________________
45.இனி இம்சிப்பதற்கில்லை
மிகச்சரியான பாதையின் வழித்தடங்களில்
விமர்சன முற்கள் விரவிக்கிடந்தன,
பொறுக்கி எடுத்து வீசுவதற்குத்தான் கூட்டம் விடுவதில்லை!
எனக்கு தன்னம்பிக்கை மேலெழுந்தது
இயற்கையின் மீது பற்று மிகுந்தது,
நான் மரக்கட்டைகளை செறுப்புகளாக்கிக் கொண்டேன்,
செருக்குற்ற முற்கள் அழிகின்றனவோ இல்லையோ எனை அவை இனி இம்சிக்க வாய்ப்பேயில்லை!
_____________________________________________________
46.அரிக்கும் ஞானம்
*மீளா துயருள் சிக்குண்டேனோ?!!?
தாளாத சழக்குகளில்
அமிழ்த்தப்பட்ட நெஞ்சை,
விழிப்புண்ட ஞானம்
அரித்து குலைக்கிறதே!
____________________________________________________________
47.பிறவி
ஏகாந்தவாசிதான் என்றால் என்ன,
மகரந்த சேர்க்கைக்காய் வந்திருக்கிறேன்,
இரவு நீளும்வரை காத்திருக்க உத்தரவு!
____________________________________________________
48.எண்ணமே வண்ணம்
போர்முரசின் முழக்கமெலாம்
சமாதானக் கொடிகள் ஏறிடத்தான்!
அடம்பிடித்த கண்ணீரெலாம்
அடைந்துவிட்ட நாளைய இலக்கினதுதான்!
எழுதி தீர்ந்த பேனா மையெலாம்
எழும்பத் துடித்த இதயத்தாகந்தான்!
____________________________________________________________
49.பேரின்பம்
உச்சம் அடைந்து பின் வீழ்தலே,
இன்பம் எனில்;
விழுந்து அகழ்ந்து பின் ஏறுதலே
பேரின்பமோ?!
______________________________________________________________
50.இருதலைக்கொள்ளி நிலை
பிடிக்கவும் முடியாமல்,
விடவும் முடியாமல்
பேரன்பிற்கும் பெருவெறுப்பிற்கும் மத்தியில்,
இருதலைக்கொள்ளி எறும்பென
தவிக்கிறேன்!
ஒரு துளி அமுதமும்
ஒரு துளி நஞ்சும் அருந்தியதாய்,
வாழ்விற்கும் மரிப்பிற்கும் இடையே மண்டிக்கிடக்கிறேன்!
_____________________________________________________________
51.ஞானம் என்றால்?
நான் : எனதோ ஞானப்பயணம்,
உன்னிடம் வழிமாறி சிக்கினேன்!
அவன்: அன்பில் சிறந்த ஞானம் ஏதடி?
நான்: ??????????
அவன்: விரிதலும் சுருங்கலும் மெய்யன்பில் விளையுமெனில்,ஞானம் என்பது வேறெதுவோ?
நான்: !!!!!!!!!!!!!!!!!
____________________________________________________________
52இறையின் நெசவு
என் மனத்தை ஆகச்சிறந்த முறையில் கீறிக் கிழித்திருந்தேன்!
இறையோ மன்னிப்புகளால் என்னை
நெய்துகொண்டிருந்தது.
____________________________________________________________
53.சகியே!
நான் உன்னை அநியாயத்திற்கு
சபிக்கிறேன்,
சலனிக்கிறேன்,
சிதைக்கிறேன்....,
நீ மட்டும் எப்படி இதையெல்லாம்
'சகி'க்கிறாய்!? என்று கேட்டேன்,
அடியே! நீயே என் 'சகி' என்றாய்!
இறைவா.
______________________________________________________________
54.மக்கிய மரபு
முளைத்துவிட்ட ஞானத்தின் வேர்கள்,
மக்கிய மரபினின்று இனி உறிஞ்சுதற்கு ஏதுமில்லை!
எனினும்,
நான் அஞ்சிக்கொண்டிருக்கிறேன்,
ஆழத்தினுள் உறங்கிடும் விழிப்பிற்குப்போய்!
_____________________________________________________________
55.கொடும்பசி
கொடும்பசியினால்
நான் கொழுத்துப்போகிறேன்;
ஞானச்சோறும் தெளிவுக்கறியும்!
_____________________________________________________________
56.எழும்பும் மெளனம்
மெளனத்தின் பிளவில்
கூச்சல்கள் நேரிடலாம்;
நான் கூச்சல்களை குவிக்கிறேன்
மெளனம் எழும்பட்டுமென!
_______________________________________________________
57.சரீர கம்பளி
ஒரு கூட்டுப்புழுவினைப் போல்
வாழ்கிறேன்,
வேறு வழியே இல்லை,
இந்த இருளுக்குள் வாழ
நான் பழகியே ஆகவேண்டும்.
என் சரீர கம்பளி என்றேனும்
ஒரு நாள் சிறகு கட்டிக்கொள்ளும்.
அதுவரைக்கும்
என் மீது இரக்கம் காட்டுங்கள்.
__________________________________________________
58.முன்முடிவுகள்
நீங்கள் தான் என்
நல்வழிகாட்டி
என்று அவரிடம்
கூறி முடிப்பதற்குள்,
உங்கள் பாசாங்கு நிறமி
வெளுத்துவிட்டது.
நான் என்ன செய்வது,
என் முடிவுகளுக்கு முன்
உங்கள் முன்முடிவுகள்
முந்திக்கொள்(ல்)கின்றன!
__________________________________________________
59.நச்சுக்கொட்டிகள்
என் அமைதி வேள்விக்குள்
உங்கள் வசைகளை
வாரிக்கொட்டாதீர்கள்,
எழும்புகின்ற புகையில்
இருக்கும் என் நறுமணத்தை
அவை நாசம் செய்கின்றன!
என் பொறுமையை கடைந்து
அமிழ்து செய்கிறேன்,
ஆனால் உங்கள் நச்சுப்பற்களின்
தீண்டலில் அது விஷமாகக்
காண்கிறேன்.
என் அசாதாரணங்களின் நீட்சியில்
உங்கள் ஆயுள் ரேகைகளை
ஏன் பொறுத்திக்கொள்கிறீர்?
நீங்கள் ஈரப்பாறையின் பாசிகளாக இருக்கையில்,
என் வானக்கொடியின்
அடிபிடித்து அமிழ்த்தல் தகுமோ?
____________________________________________________________
60.சருகே சரணம்
பிரிவுகளின் இடிபாட்டில் சிக்குண்ட இந்த இளகிய மனம் ஏன் இலகுவாய் மீள்வதே இல்லை...?
பல ஆற்றுப்படுத்தல்கள் நீராவி போலாகின்றன.
எதுவுமே நடவாதது போல் எப்படித்தான் ந(ட)டிப்பது?
தானே அவிழ்ந்து தரையிறங்கிய இந்த சருகுகள்தான்
எவ்வளவு குஷியாய்
கிசுகிசுக்கின்றன காற்றிடம்?
____________________________________________
61.கொக்கொக்க கூம்பும் பருவத்து
நான் எனக்காய் வாதாடிடும்
உரிமை மறுக்கப்பட்டிருந்தது,
ஆயிரம் சாட்சிகளை எனக்காய்
தயார் செய்த என் மனசாட்சி
வலுக்கட்டாயமாக அடக்கப்பட்டது...
அடைத்துக்கொண்டு வரும் தொண்டையை மவுனம் கவ்வி நெறுக்கியது...
அவர்களின் கண்கள் கூசுவதால்,
என் கனவுகளின் வெளிப்பாடுகளை
புதைக்க அறிவுறுத்தினர்.
கண்ணீர் சுரபியில் காற்று அடைபட்டுக்கிடக்க,புறையோடிக்
கொண்டது என் கண்ணியம்.
செரிமானம் ஆகாத அந்த வசைகளை
என் உள்ளூறிக்கிடந்த விழுமியங்களுக்கு படையலிட்டேன்...
தேர்ந்த சோகத்தில் மூழ்கிய கன்னங்களை கட்டாயமாக இதழ்விரிப்புக்குள் ஒளிக்கத்துடித்தேன்.
என் பொறுமையின் துகள்களை
அவர்களின் ஊள்ளீடற்ற இளிப்புகளுக்குள் பொறுக்கிக்கொண்டிருந்தேன்.
இத்தனையும் நீ ஏன் சகிக்கிறாய்?
என்கிறீரா...
கொக்கொக்க கூம்பும் பருவத்து.............................
நினைவில் உதித்த குறளை - என்
நெஞ்சில் தடவிக்கொண்டேன்.
சிவநிறைச்செல்வி
Comments
Post a Comment