கொட்டும் மழையில் 'மாணிக்குழி'! (பயணக்கட்டுரை)
அடைமழைக்கு ஆயத்தமாகி இருந்த மேகங்கள்,அன்றைய விடியற்பொழுதை மிகவும் இலகுவான இறகைப்போல மெல்ல கடத்திக்கொண்டிருந்தன.விடிந்தும் விடியாத இந்த காலைப்பொழுதில் ஏனோ அயர்ச்சி மிகுதியால் உறங்கிக்கொண்டிருந்தேன்."மடமடன்னு கெளம்பும்மா,உங்கப்பா உன்னைய கெளம்பி ரெடியா இருக்க சொன்னாரு ,ஆல்ரெடி மணி எட்டு என்றபடி என் அம்மா கிட்சனில் இருந்தபடி குரல் எழுப்பினார்."எங்கம்மா போறோம்? என்றபடி தூக்கம் கலையாத நான் என் அம்மாவிடம் கேட்டேன். எங்க போறோம் இல்ல,எங்க போறீங்கன்னு கேளு! என்றார்.ஆர்வமிகுதியில் குஷியாகிவிட்டேன்.நானும் அப்பாவும் மட்டும் போறோம்னா இன்று முழுநாளும் பயணம்தான் என்பதால் தூக்கமே கலைந்துவிட்டது எனக்கு."மாணிக்குழின்னு ஏதோ கடலூர்க்கு பக்கத்துல திருவந்திபுரம் கிட்ட ஒரு கோயிலாம்"என்றார்.
மேகமூட்டத்தின் காரணமாக மழை வரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடை, வாட்டர் பாட்டில்,கைபேசி நனையாமல் இருப்பதற்கு ரெண்டு சின்ன பிளாஸ்டிக்கவர்,ரெயின்கோட் எல்லாம் பேக் பண்ணியாச்சு.இதுல விசேஷம் என்னன்னா டூ வீலர்லயேதான் முழு பயணமும்.அம்மாவிற்கு டாடா பை சொல்லி கிளம்பிட்டோம்.
விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் அரசூர்வரை சில்லென்ற காற்று மிதமாக சுழன்று சுழன்று முகத்தில் அரைந்துகொண்டிருக்க,நான் ராஜா சார் மெலடி கேட்கின்ற உணர்வில் வானத்தையே வெறித்துக்கொண்டு பயணித்தேன்.
அரசூர் வந்தவுடன் கிராமசாலை வழியாக பயணம் தொடங்கியது.அப்பப்பா பார்க்கின்ற திசையெல்லாம் பச்சை பசேல் வயல்வெளிகள்.மிகவும் இருட்டிக்கொண்டு வந்தது.
வண்டியை நிறுத்தி ரெயின்கோட் போட்டுக்கொண்டோம்.ஒரு மைல் கடந்ததும் லேசான தூறல்,சூடாக பூரிக்கிழங்கு சாப்பிடனும்போல் இருந்தது.வழியில் ஒரு சின்ன உணவகத்தில் சூடான வடை,கிழங்குடன் இரண்டு பூரி சாப்பிட்டபடி அந்த குளிரான வானிலையில் கரைந்துகொண்டிருந்தேன்.
மீண்டும் பயணிக்கத்தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் , "ஷக்க மழை" அப்போது பண்ருட்டியை கடந்திருந்தோம்."இன்னா மழை! உங்கவீட்டு மழை எங்கவீட்டு மழை இல்ல அப்படி ஒரு அடைமழை.ரெயின்கோட்டை தாண்டி முகத்தில் சுளீர் சுளீரென்று மழைத்துளிகள் அரைந்துகொண்டிருக்க,நாங்கள் பயணத்தை நிறுத்தவேயில்லை.
நானும் அப்பாவும் ரொம்ப அமைதியாவே எதுவுமே பேசாமதான் ரொம்ப நேரம் பயணித்தோம்.ஆனாலும் அந்த ஆழ்ந்த அமைதிக்குள்தான் , தந்தை மகளின் பிரியம் ஆழமாய் எக்காளமிட்டுக்கொண்டிருக்கும்.எனக்கு தோதான பயண ஆர்வம் கொண்டவர் அப்பாதான்.கொட்டும் மழையில் நெடுந்தூரம் நனைந்தபடியே பயணிப்பதெல்லாம் ஒரு பெருஞ்சுகம்.
இன்னும் ஒரு கிலோமீட்டர் தான் மா,கிட்ட வந்துட்டோம்.'நாம போற இந்த கோயில் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர்கிட்ட தான் திருமால் தன் வாமன அவதாரத்தின் போது மாவலி சக்கரவர்த்தியை அழித்த தோஷம் நீங்கிட வழிபட்டார்.இத்திருக்கோயில் சிவலிங்கம் (சுயம்பு) சூரியனாரால் பூஜை செய்யப்பட்டது,என்றார்.
நாங்கள் 10 மணிக்கெல்லாம் கோயிலுக்குள் நுழைந்துவிட்டோம்.
அர்ச்சனைத்தட்டு வாங்கிக்கொண்டு , பிரகாரத்தினுள் நுழையும்போதெல்லாம் மழை இன்னும் பலமடங்கு அடித்து விளாசிக்கொண்டிருந்தது.கர்பக்கிரகத்தை அடைந்தபோது, ஏதோ திரைபோல் தெரிந்தது.அப்பா,'திரை போட்ருக்காங்க எப்ப தெறப்பாங்கன்னு தெர்லயே'ன்னு சொன்னேன்.
அப்போது அப்பா கர்ப்பக்கிரகத்தின் சிறப்பினை எடுத்துரைத்தார்.
பொதுவாக மற்ற சிவாலயங்கள் போலல்லாது,இக்கருவறை இறைவனை 2,3 விநாடிகள் மட்டுமே தரிசிக்கமுடியும்.இதன் காரணமாக,இறைவரை தரிசிக்கவேண்டி மற்ற கோயில்களில் உள்ளது போலல்லாது,நந்தி விழிப்புடன் நேர்திசையில் தலைவைத்து இறைவனை பார்த்தபடி உள்ளது.
இறைவரும் இறைவியும் கர்ப்பக்கிரகத்தையே பள்ளியறையாக கொண்டிருப்பதால் தான் இந்த 2 நொடி தரிசனம் ஐதீகமாகியது.கர்ப்பக்கிரகமே பள்ளியறையாக இருப்பதால் இந்த கோயிலில் அர்த்தசாம வழிபாடு & பள்ளியறை என்று ஒன்று தனியே கிடையாது.
கர்ப்பக்கிரகமே பள்ளியறையாக விளங்குவதால் சிவசக்தியின் காவலராக 11 ருத்ரர்களில் ஒருவரான "பீமருத்ரர் " திரைச்சீலை வடிவில் உள்ளார்.
இந்த திரையில் இருக்கும் பீமருத்திரருக்குத்தான் முதல் ஆராதனை,அதன் பிறகு திரை நீக்கப்பட்டு ஒரு சில விநாடிகள் வாமனபுரீஸ்வரரை தரிசிக்கலாம்", என்றார் அப்பா.
"சொற்றுணை வேதியன்" தேவாரத்தை நான் பாடிமுடிக்க, " இடரினும் தளரினும் " திருப்பாட்டினை அப்பா பாடியபோது நான் ஆடித்தான் போனேன்....காரணம், அந்த குரலில் குழைந்திருந்த பக்தி." அதுவோ உமது இன்னருள் ஆவடுதுறை அரனே" என்று பாடியபோது,நான் வேண்டறத கூட கொடுக்கமுடிலனா அப்பறம் என்ன பெரிய ஆள் நீ, அவ்வளவுதானா உன் அருள் ? சம்பந்தர் சிவபெருமானை கேள்வி கேட்ட தொனியாக எனக்குப்பட்டது.
மழை விடுவதாகவேயில்லை , நானும் சிவபுராணம் பாடத்தொடங்கினேன்.பெய்துகொண்டிருந்த கனமழையே என் கானத்திற்கு ஆலாபனை ஆகியிருக்க,பிரகாரத்தில் பட்டுத்தெறிக்கும் மழைத்துளிகளே தாளச்சத்தமாகி இசைகூட்டிவிட, ஆகா இதுதான் இசைமழையோ எனப்பட்டது.
கருவறை வாயிலின் இடதுபுறத்தில் வாமன அவதார விளக்கச்சிற்பங்கள் சுவரில் அமைக்கப்பட்டிருக்க, கோயில் பூசாரி பின்வருமாறு விவரித்தார்:
"பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மத்தை உலகிற்கு எடுத்துரைக்க விரும்பிய திருமால் வாமன அவதாரம் எடுத்தார்.மகாபலி சக்கரவர்த்தியின் தர்மசிந்தனை குறித்த கர்வத்தை அடக்க 3 அடி மண் கேட்டார்.
ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், 3 வது அடி எங்கே என கேட்டார்.அதற்கு மகாபலி , " இந்த உலகை ஆளும் என்னையே அளந்துகொள்ளுங்கள் என திருமாலின் திருவடி முன் குனிந்தார்.இப்படி மகாபலியை அழித்ததால் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது.அந்த பழியை நீக்கிக்கொள்ள இத்தல இறைவனை வாமனன் வணங்கினார்.அதனால் தான் இத்தலத்திற்கு 'மாணிகுழி' என்ற பெயர் ஏற்ப்பட்டது.(மாணி என்றால் பிரம்மச்சாரி (வாமனன்); குழி - குழியில் லிங்கம் அனைத்து வழிபட்டமை).
இத்தல இறைவர்க்கு உதவிநாயகன் என்ற பெயரும் உண்டு.இதன்பின் ஒரு கதை உள்ளது என்ற பூசாரி மேலும் விவரித்தார்.
'வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட ,
இறைவன் அவ்வணிகனை கயவர்களிடமிருந்து காத்து உதவி புரிந்ததால் உதவிநாயகர் எனப்பட்டார்.
தேவாரத்தில் சம்பந்தரும் " உதவிமாணிக்குழி" என்றே குறிப்பிடுகிறார்.
பிரகாரத்தை சுற்றிவரத்தொடங்கினோம்.ஒவ்வொரு சன்னிதியிலும் பல வித்தியாசங்கள் உள்ளதை கவனித்தோம்.பிற ஆலயங்களில் காணக்கிடைக்காத அம்சங்கள் இருந்தன.
முதலில் விநாயகர் சன்னிதி,அங்கே உள்ள மூஷிக வாகனம் எப்போதும்போல் பிள்ளையாரை பார்த்தபடி இல்லாது,
நேரே நம்மை பார்த்தவண்ணம் அமைந்துள்ளது.ஆகையால் இந்த விநாயகரை வழிபடுவதால் நம் எதிரிகளை தன்வசப்படுத்தலாம் என்கின்றனர்.
இருட்டிக்கொண்டு வந்த மழையில் தோப்புக்கரணம் கூட போட முடியவில்லை.
அப்படியே நனைந்துகொண்டே வள்ளி தெய்வானை சமேத முருகனை அடைந்தோம்.பொதுவாக வலது புறம் இருக்கவேண்டிய மயில் (அசுர மயில்),இடது புறமாக (இந்திர மயிலாக) வடக்கு நோக்கி நின்றிருந்தது.இதன் காரணம் சூரசம்ஹாரத்திற்கு முன் இருக்கும் முருகரை இது குறிப்பிடுகிறது.அருணகிரிநாதர் இத்தலமுருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.
கற்பூரப்பசை ஒட்டிய அந்த படிகளில் ஏறி பிசுபிசுத்த எங்கள் கால்கள் அடிப்பிரதட்சணமாக மழைநீர்க்கால்வாயை கடந்தன.
கொன்றை மரம் தலவிருட்சமாக பரவியிருந்தது.
திரேதாயுகம் ,துவாபரயுகம்,கலியுகம் ஆகிய யுக லிங்கங்கள் ஒரு புறமிருக்க.
தேரைய சித்தரின் ஜீவசமாதி மீது ஒரு சன்னிதி கட்டப்பட்டிருந்தது.
"உதிக்கின்ற செங்கதிர்" போன்ற மேனியாளாகிய அம்புஜாட்சி
அம்பாளை தரிசித்தோம்.ஜெயா விஜயா என்ற பெண்காவல் தெய்வங்களோடு பாலவிநாயகர்,பாலமுருகரும்,பைரவரும் இருந்தனர்.
இத்தல வாமனபுரீஸ்வரர் - அம்புஜாட்சியை வழிபடுவோரின் திருமண பந்தம் மேம்படும் என்றும்,திருமணம் ஆகாதோர்,குழந்தை வரம் வேண்டுவோருக்கும் நன்மை நடக்கும் என்பது ஐதீகம்.
தாமரை மலரின் மீது நின்றபடி இனிமையாக காட்சி தருகிறாள் துர்க்கை.பொதுவாக துர்க்கை மகிஷ (எருமை ) தலையின் மீது நின்றிருப்பாள்.இக்கோயிலின் துர்க்கை மகிஷ வதத்திற்கு முன் அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட துர்க்கை மட்டும் எருமை தலைமீது நிற்பதாக உள்ளது.இது பின்னாளில் சோழர்களால் கட்டப்பட்டிருக்கலாம்.
1,2,3ஆம் குலோத்துங்கன்,3ஆம் ராஜராஜசோழன்,
விக்கிரம பாண்டியன்,விஜய நகர பிரதாப தேவர் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் காணக்கிடைக்கிறது.
அப்பர்,சம்பந்தர்,சுந்தரர்,சேக்கிழார்,திருமால் வழிபட்ட தேவார பாடல்கள் பெற்ற திருத்தலம்.
அள்ள அள்ளக்குறையாத அருளை நாங்கள் அடைமழையின் தொடுதலில் உணர்ந்தபடி பிரகாரத்தை வலம் வந்து கொடி மரத்தின்முன் விழுந்து வணங்கினோம்.
மலைப்பை வாரி வழங்கிய இத்திருக்கோயிலை எண்ணி எண்ணி வியந்தபடி விடைபெற்று வெளியேறியபோதுதான் நான் ஒரு மலையை என் முன்னே கண்டேன்.
கோயிலை விட்டு வெளியே வந்தபோது காப்பர் குவாரி என்றழைக்கப்படும் அந்த மலையை அப்பா காண்பித்தார்.
எல்லா சிவ தலங்களையும் வழிபட்ட அகத்தியர் இந்த வாமனபுரீஸ்வரரை வழிபட வந்த போது இறைவரின் காட்சி கிடைக்கவில்லை.கோபத்தில் குறுமுனியாகிய அவர் ஒரு சாபம் விட்டார்," பல ஜென்மான்திர புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இத்தல இறைவரை வழிபடுவர்" என்றார். வாமனபுரீஸ்வரரின் காட்சி கிடைக்காத ஏமாற்றத்தில் அகத்திய முனிவர் இந்த மலையில் அமர்ந்து தவம் புரிந்து ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்."அகஸ்தீஸ்வரர் " என்ற அந்த கோயில் இன்றும் மலையில் உள்ளது என்றார்.
அத்துடன் திருவண்ணாமலை கார்த்திகை மாத பரணி நட்சத்திர மகாதீபம் & கிரிவலம் போலவே ,
திருமாணிக்குழி கிரிவலத்திற்கு பிரசித்தி பெற்றது.
கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் இந்த மலைமீது மகாதீபம் ஏற்றப்படுகிறது.பல பக்தர்கள் இங்கு பவுர்ணமிதோறும் கிரிவலம் வருகின்றனர் என்றார்.
தெவிட்டாத அமிழ்தமதான பிரம்மிப்பில் மூழ்கிப்போன என்னை, சன்னமான தூறல் துளிகளே தட்டி யெழுப்பின.நாங்கள் விடைபெற்றோம் மாணிக்குழியிடம் இருந்து,
பண்ருட்டியில் இறங்கி மழைக்குப் பருகிய சூடான தேநீரும் சுடசுட பகோடாவும் கூட எனக்கு சுவைக்கவில்லை; ஏன் விழுப்புரம் ஆவினில் பருகிய அல்டிமேட் காபி கூட என் நாக்கில் ஒட்டவில்லை,இந்த தலத்தின் தனித்தன்மையில் லயித்த எனக்கு.
நாவின் சுவையை விட , ஆன்மாவில் ஒட்டிய சுவையே அளப்பரியது என்றுணர்ந்தேன்.
இதற்காகவேனும் இன்னும் இன்னும் பயணிக்கவேண்டும்.ஆன்மாவின் ருசியை பயணங்களே பரிமாறுகின்றன.
-சிவநிறைச்செல்வி
(பின்குறிப்பு:
கோயில் அமைவிடம்:
தமிழ் நாடு
திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து, திருவகீந்திபுரம் வழியாகப் பானூர், பண்ருட்டி செல்லும் பாதையில் திருவகீந்திபுரம் சென்று, அடுத்து, 'சுந்தரர்பாடி' என்னுமிடத்திற்கு அருகில் சாத்தாங்குப்பம் என்னும் வழிகாட்டி காட்டும் வழியில் சென்று, கெடிலநதிப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலேயே கெடிலநதியின் தென்கரையில் கேபர் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள இத்தலத்தை அடையலாம். கடலூர் - குமணங்குளம் நகரப் பேருந்து திருமாணிக்குழி வழியாகச் செல்கிறது.
Read more at: https://shaivam.org/hindu-hub/temples/place/144/thirumaanikuzhi-vaamanapureeswarar-temple/#gsc.tab=0 )
Comments
Post a Comment