ஜப்பானில் ஒரு நாள்


 ஜப்பானில் ஒரு நாள்


நானும் என் கணவரும் முதல் முறையாக விமானத்தில் பயணிக்கிறோம்.என்னால் எனக்கு நடந்துகொண்டிருப்பதை நம்பவேமுடியவில்லை.
உண்மையில் நான் விமானத்தின் இருக்கையில் என் கணவரோடு அமர்ந்து கொண்டிருந்தேன்.
மேகங்களின் ஊர்வலத்தை கண்கொட்டாது ரசித்துக்கொண்டிருந்தேன்.
விமானம் மேலே பறந்துகொண்டிருந்த நொடிகளை நான் அதிசயம் போல பூரித்து பூரித்து அனுபவித்துக்கொண்டிருந்தேன்.
என் கணவரோடு பெரிதாக வெளியூர் பயணங்கள் செய்யும் வாய்ப்பு பெரிதாக எனக்கு கிடைத்ததில்லை.
அப்போதெல்லாம் நினைத்ததுண்டு எப்படியேனும் என் திறமையால் நான் முன்னேறி என் சமபாத்தியத்தில் வெளிநாடுகளுக்கு என் கணவரை என்னோடு அழைத்து செல்லவேண்டும் என்று.

அலுவலக பணிக்காக பயணம் என்றால் வீட்டில் யாராலும் மறுப்பு சொல்லமுடியாது,என் கணவர் என்னோடு வந்தே தீரவேண்டும் .அதனால் எங்கள் வெளிநாட்டு பயணங்களை யாராலும் தடுக்கமுடியாது என்று உறுதியாக நம்பினேன்.

அன்று உண்மையில் அது நிகழ்ந்துகொண்டிருந்தது.
நான் மேகங்களின் பஞ்சு தேகங்களை எண்ணி எண்ணி சிலிர்த்துக்கொண்டேன்.
என்னையே நான் கிள்ளிக்கொள்ள எத்தனித்தேன்.

விமானம் தரையிறங்கியது,
ஜப்பான் விமான நிலையம் தனக்கே உரிய பளபளப்புடன் மக்கள் பரபரப்புடன் எங்களை இனிதே வரவேற்றது.

நானும் என் கணவரும் checkin செய்தோம்.லக்கேஜ்களை சரிபார்த்தோம்.பின் ஜப்பானிய நேரப்படி காலை 10 மணி என்பதால் காலை உணவு உண்பதற்காக விமான நிலைய பயணியர் ஓய்வறைக்கு ( Airport Lounge) சென்றோம்.அங்கு எங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தி காலை உணவை முடித்தோம்.

எங்களின் அடுத்த விமானம் மாலை 6.30 மணிக்கு என்பதால்,எங்களுக்கு நீண்ட நேரம் காத்திருக்கவேண்டி இருந்தது.
மாலைவரை விமான நிலைய ஓய்வகத்தில் இருப்பதற்கு எங்களுக்கு மனம் ஒப்பவில்லை.

அதனால் நாங்கள் கொஞ்ச நேரம் ஜப்பான் சிட்டி செண்டர் போக முடிவெடுத்தோம்.
அதற்கு எனக்கு சிறிது காய்ச்சல் இருப்பதாக தோன்றியதால் விமான நிலையத்தை ஒட்டியிருந்த மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்தோம்.அதற்கு முன் கரன்சி மாற்றம் செய்யவேண்டும்.


விமான நிலையத்தின் புறவழிப்பாதைக்கு அருகில் கரன்சி எக்ஸ்சேஞ்ச் மையம் இருந்தது.
நான் என் கணவரிடம் இந்திய கரன்சிகளை  ஜப்பானிய கரன்சிகளாக மாற்ற சொல்லியிருந்தேன்.
தேவையான அளவிற்கு மாற்றியபின்,ரொக்கத்தை பெற்றுக்கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறினோம்.

விமான நிலையத்திற்கு அருகே இருந்த மருத்துவமனையில் கையில் இஞ்சக்‌ஷன் செய்துகொண்டு விடைபெற்றோம்.


ஜப்பான் சிட்டி செண்டருக்குள் ஒரு அம்யூஸ்மண்ட் பார்க் இருந்தது, அங்கே சென்று நானும் என் கணவரும் வாட்டர் கிளைடிங் செய்தோம்.
மேலே இருந்து சருவலாகவும் நெட்டாகவும் இருந்த நீண்ட  வழித்தடத்தில்  வழுக்கியபடி வந்து நீச்சல்குள நீரில் பொத்தென்று விழுவதுதான் வாட்ட கிளைடிங் ஆகும்.
நாங்கள் எங்கள் பயண கேமராக்களை ஆன் செய்து வீடியோக்கள் செல்ஃபிக்கள் எடுத்துக்கொண்டோம்.

அப்போது என் கணவரிடம் நான் கூறிய வார்த்தைகள் இதோ,நான் என் அரசுப்பணிக்குப் பிறகுதான் இது போன்ற வெளிநாட்டு பயணங்கள் செய்வேன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.ஆனால் கடவுளின் விருப்பத்தால் அதற்கு முன்னமே நான் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுவிட்டேன்,அதுவும் என் திறமையின் மூலம் என்னால் நம்பவேமுடியவில்லை என்கிறேன்.

சிறிது நேரம் கழித்து ,
ஜப்பானில் உள்ள சூயி (sui)என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்றோம்.
சூயி 10 ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.அன்று விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருந்தாள்.
எனக்கு அவளைக்கண்டதும் ஒரே மகிழ்ச்சி.
சூயியின் தாய் வேலையாக வெளியே சென்றிருந்தார்.
அதுவரைக்கும் சூயியுடன் நான் நேரத்தை செலவிட்டேன்.


சூயி தன் வீட்டு டி.வியில் ஜப்பானிய மற்றும் கொரிய பாடல்களை போட்டுவிட்டிருந்தாள்.ஸ்பீக்கர் எபஃக்ட்டுடன் அந்த பாடல்கள் என்னை மேலும் உற்சாகமூட்டின.

அதில் ஓரிரு பாடல்கள் தமிழ்பாடல்களின் ஜப்பானிய கொரிய வர்ஷன்களாக இருந்தன.
தமிழ் படத்தின் ஏதோ ஒரு மாஸ் ஹீரோவின் மசாலா குத்துப்பாடல் ஒன்றை சூயி ஜப்பானிய மொழியில் ப்ளே செய்தாள்.
நானும் சூயியும் ஒன்றாக இணைந்து குத்தாட்டம் போட்டோம்.அப்போது என் சுகி அம்மா அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்தார்.அவரிடம் என் போன் கேமராவை கொடுத்து எங்கள் டான்ஸை வீடியோ எடுக்க சொன்னேன்.

நிச்சயமாக இதை ஸ்டேட்டஸ் போடவேண்டும் , தமிழ் ரீமேக் ஜப்பானிய பாடலுக்கு நான்  ஜப்பானில் நடனம் என்று வாட்ஸப்பில் போட ஸ்டோரி ரெடிசெய்தேன்.

மாலை ஆகிவிட்டது,
எங்கள் அடுத்த விமானம் ஏனோ கேன்சல் ஆகியிருந்தது.அதனால் இந்த செய்தி அறிந்தபின் மறுபடி வெளியே அலைந்து திருந்து மாலை சூயி வீட்டிற்கே வந்தோம்.
அப்போதெல்லாம் சூயியின் தாய் வந்துவிட்டார்.அவர் எங்களுக்கு இரவு உணவுக்கு ஏதோ தயார் செய்துகொண்டிருந்தார்.

சூயியின் தாயிற்கு தமிழ் தெரியாது.எனக்கோ ஜப்பானிய மொழி தெரியாது.இருவரும் சைகையால் பேசிக்கொண்டோம்.
அம்மா இருங்க உங்களுக்கு நான் சமைச்சுத்தரேன்னு நான் சைகையால் எவ்வளவும் சொல்லியும் சூயியின் தாய் கேட்கவேயில்லை அவர் வேலையில் அவர் மும்முரமாய் இருந்தார்.


திடீரென்று என் கைகளில் அலர்ஜி போல் ஆனது.என்னடி சூயி இப்படி இருக்கு என்றேன்.சூயி யாரோ ஒரு மருத்துவரை அழைத்துவந்தாள்.
அவர் என் கைகளின் வீங்கிய பகுதி ஒன்றை அழுத்தி ஏதோ களிம்பு போல் ஒன்றை வெளியேற்றினார்.பிறகு அவர் ஒரு ஊசிபோட்டார்.பிறகு எனக்கு எல்லாம் சரியாகிவிட்டது.
அந்த மருத்துவர் என்னை நோக்கி , " உங்களை போன்ற வெளிநாட்டு வாசிகள் செய்யும் பெரிய தவறு இதுதான்,நீங்கள் விமான நிலையம் அருகில் உள்ள மருத்துவமனை யில் ஊசிபோட்டிருக்ககூடாது,வெளிநாட்டு பயணிகளுக்காகவே பிரத்யேகமான மருத்துவமனைகள் ஜப்பான் சிட்டிசெண்டரில் உள்ளன.இனி ஏதேனும் வைத்தியம் என்றால் அங்கே செல்லுங்கள்" என்றார்.

சூயி அசதியாக ஹாலில் தூங்கிக்கொண்டிருந்தாள் .
*"அடியேய்;! சூயி எழுந்திரு எழுந்திரு...எங்க ஃப்ளைட் கேன்சல் ஆயிடுச்சி,இன்னும் ரெண்டு நாள் நாங்க ஜப்பான்லதான் இருப்போம்.இந்த ரெண்டு நாள் எனக்கு ரொம்ப முக்கியம்,இத நான் வேஸ்ட் பண்ணிரக்கூடாதுடி சூயி,இந்த ரெண்டு நாட்கள் என் வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத நாட்களாக மாற்ற உன்னாலதான் முடியும் ,வா சூயி எழுந்திரு எஞ்ஜாய் பண்லாம்" என்றேன்.
சூயியும் எனக்கு ஒத்துழைத்தாள்.


எங்கள் ஜப்பான் பயணம் இத்துடன் நிறைவுற்றது.

இவ்ளோ நேரம் நீங்க படிச்சது என் ஜப்பான் பயண அனுபவம்னு தான நெனச்சீங்க.

ஆனால் அதான் இல்ல.எனக்கு விடியற்காலை  வேலையில் இன்று வந்த கனவுதான் இது.
இது தூக்கத்தில் வந்த கனவு என்று சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள்.நான் அந்தளவிற்கு இந்த கனவை உண்மையில் நடப்பதாகவே நம்பிவிட்டிருந்தேன்.
தூக்கம் கலைந்தபோதுதான் இது வெறும் கனவு என்று புரிந்தது.

நான் பொதுவாக பல பயண நூல்கள் வாசிப்பது,பயண வீடியோக்களை பார்ப்பது ஆகியவற்றை பொழுதுபோக்காக வைத்திருப்பேன்.
இதில் என்ன அதிசயம் என்றால் இதுவரைக்கும் ஆஸ்திரேலியா,அசர்பைஜான்,பாலி,மலேசியா,ஆம்ஸ்டர்டாம்,ஸ்பெயின்,சமோவா தீவு,நீயுசிலாந்து,நியூயார்க்,துருக்கி,வியட்னாம்,சீனா,மெக்சிகோ ,வெனிஸ்,அமெரிக்கா,தென்கொரியா  இன்னும் பல என்று  எண்ணிலடங்கா பயண வீடியோக்களை கண்டு ரசித்திருக்கிறேன்,வாசித்து பூரித்திருக்கிறேன்.

ஆனால் இந்த லிஸ்ட்லயே இல்லாத நாடுதான் ஜப்பான்.நான் ஜப்பான் டிராவல் வீடியோக்களை இதுவரை பார்த்ததில்லை.வெஜிட்டேரியன் ஃபுட் கிடைக்காத ஒரே நாடு ஜப்பான் என்று கேள்விப்பட்டதாலோ என்னவோ நான் ஜப்பான் பயணம் பற்றி பெரிதாக ஆராய்ந்ததில்லை.

ஆனால் எனக்கு வந்த கனவை பாத்தீங்களா,இதுவரைக்கும் நான் தெரிந்துகொண்டிராத ஜப்பானிற்கு நான் கனவில் சென்றுவந்துவிட்டேன்.

ஒருவேளை இதுதான் அப்துல்கலாம் சொன்ன கனவோ!?!!


"தூக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை தூங்கவிடாமல் செய்வதே கனவு".


-சிவநிறைச்செல்வி

Click these links and Read how Japan is so special for Introverts 

Comments