புத்தக விமர்சனம் : போர்களின் தேசத்தில் (ஓர் ஊர்சுற்றியின் வியட்நாம் பயணக்குறிப்புகள்) -ரமாதேவி ரத்னசாமி
என் உள்முகப்பயணத்திர்கு என் மனம் பிரயத்தனப்படும்போதெல்லாம்,நான் ஓர் ஊர்சுற்றியாக மாறிவிட நினைப்பதுண்டு.
உள்முகப்பயணத்திற்கு ஏன் ஊர் சுற்றவேண்டும்.அதற்கு நான்கு சுவர்களுக்குள் முடங்கிக்கிடந்தால் ஆவாதா? என்ற கேள்வி வரலாம்.
நான் இயல்பிலேயே பயணவிரும்பி,அதனால் நான் ஒரு தேசாந்திரியாகிறபோதுதான், என் மனம் லேசாகி கண்களுக்குள் கனன்றுகொண்டிருக்கும் எல்லா பாரங்களும் ஒவ்வொரு பயணத்தின்போதும் காற்றில் மிதக்கின்ற சுன்னப்பொடியாகி காணாமல் போய்விடும்.
ஆன்மபிரியம் கொண்ட ,அதாவது எல்லா உயிர்களையும் இறைசுவரூபியாக ரசிக்கும் ஒருவளுக்கு இதுபோன்ற வெளிப்புற பயணங்கள் உள்முக வாயிலின் அடைசல்களை விலக்கி வழிவிடுவனவாகி இருக்கின்றன.
திருமதி.ரமாதேவி ரத்னசாமி அவர்களின் 'அடுக்களை டூ ஐ.நா' நூலை சென்ற ஆண்டு வாசித்ததன் நினைவோடு,இந்த ஆண்டும் ஒரு பயண நூல் வாசித்துவிடவேண்டும் என்று தீர்மானித்தேன்.
முந்தைய நூலின் நியூயார்க் வீதிகளை மறக்க மறுத்த என் மனம்.அடுத்த பயண நூலின் தேடலுக்கு என்னை உந்தித்தள்ளியது.அதன்வண்ணம் நான் கண்டறிந்த இந்த நூல்தான் அதே எழுத்தாளரின் "போர்களின் தேசத்தில்- ஒரு ஊர்சுற்றியின் வியட்நாம் பயணக்குறிப்புகள்".
ஏஜெண்ட் ஆரஞ்ச் குறித்த என் சொற்ப அறிவை சற்று கிளறி தூசுதட்டிய இந்த நூலின் அணிந்துரையே எனை உள்ளே இழுத்துக்கொண்டது.
ஆர்வ்ம் மிக ,உள்ளே வாசித்தேன்.இல்லை இல்லை எழுத்தாளரோடு மூளைக்குள்ளேயே வியட்நாமிற்கு சுற்றுலா சென்றேன்.
ஹோ சி மின் நடைபாதை தெருக்களில் மின்னிய பப்களிலும்,
மத்திய தபால் நிலையத்தின் ஐ.எஸ்.டி பூத்களிலும் நான் நின்று மணிக்கணக்கில் சுயமி எடுத்துக்கொண்டேன்.
பிங்க் சர்ச் , நாட்ரோடாம் கத்தீட்ரல் எல்லாம் என்னுள் ரோமானிய கோதிக்கட்டிடக்கலையை கண்முன் நிறுத்தின.அந்த கன்னிமேரியின் பளிங்கு சிலையில் பட்டுதெறித்த மின் ஒளி என் கன்னம் தொட்டது.
ஹோ சி மின் புத்தக சந்தையில் நானும் கூட கால் நோக புத்தகங்கள் தேடியதாகவும்,பென் தாங் ஷாப்பிங்கில் நான் கூட தோல் பைகள் ரெண்டு வாங்கிக்கொண்டதாகவும் உணர்ந்தேன்.
நேபாம் சிறுமியும் ,ஹீதரும் தான் என் நினைவை விட்டு அகல மறுக்கிறார்கள்.
ஹோ சி மின்-இன் சொற்பொழிவுகள் இன்னும் செவிகளில் ஒலிக்கின்றன.
பிரெஞ்சு ,அமெரிக்க ,ஜப்பானிய கோர முகங்களிடம் வென்ற இந்த புன்னைக்கைக்கும் வியட்நாமியர்கள் தான் என் வாழ்நாள் இன்ஸ்ப்பிரேஷன்.இவர்களிடம் தான் எத்தனை தன்னம்பிக்கை.
குச்சி சுரங்கத்தில் தவழ்ந்து சென்ற பூஷிதாவுடன் நானும் கூட மூச்சுத்திணற திணற வியர்த்து களைத்து சுரங்கத்தின் இடுங்கிய இருளில் தெரிந்த ஒளிவிளக்கின் பாதையில் மடமடவென்று ஊர்ந்து சென்றேன்.அன்றைய வியட்நாமிய போர்வீரர்களின் மெல்லிய உணவான
வேகவைத்த மரவள்ளியும்,தேங்காய் மிட்டாயும்,தேன் தேனீரும் கூட பருகியதாய் கூறியது என் உமிழ்சுரப்பி.
மெக்காங் நதிக்கரையும்,சைகான் நதிக்கரையும் சலசலக்கும் ஓசைகள் என் ஆர்ப்பறிப்பை அமைதிப்படுத்தின.
ஹோ சி மின் சிட்டி டூரின் மியூசியத்தில் படுக்கை சிறையும்,கில்லட்டினும் என்னால் கடந்துவரமுடியாதவையாய் இருந்தன.
என்னதான் சொன்னாலும் சைகான் ஸ்கைடெக் (உயர்ந்த கட்டிடம்) தான் நான் விழிவிரித்து நான் வெறித்து என்னை மறந்துநின்ற நொடிகள் எனுவேன்.அந்த 360 டிகிரி சிட்டி விஷனில் சைகான்/ஹோ சி மின் சிட்டியே எனைப்பார்த்து பரபரத்த தன் சாலைகள் மூலம் நலம் விசாரித்த அலாதி உணர்வு.
எல்லாவற்றை விட அந்த புளியோதரை தொக்கும் சாதமும் தான் என்னைப் போன்ற வெஜிட்டேரியன்களுக்கு கதி.வியட்நாமின் ஸ்டிக்கி நூடுல்ஸ்-உம், இனிப்பு சூப்பும் எத்தனை நாள்தான் தாங்கும்.
சரி டாட்டா....பை...
நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன்.
ஏன்னா நான் இருக்குற நாலு சுவற்றுக்குள் நான்கு மணிநேரத்திற்குள் ஆச தீர வியட்நாமை ஊர்சுத்திப் பாத்துட்டேன்.இது இந்த உள்முக எழுச்சிதான் பயணத்தின் பரிசு.
திருமதி.ரமாதேவி அவர்களின் கைப்பிடித்து வியட்னாமின் மண்ணை என் கால்களால் தொட்டுவிட்ட பூரிப்புடன் இந்த பயண நூலை வாசித்து முடித்தேன்.
-சிவநிறைச்செல்வி
Comments
Post a Comment