லண்டன் பயணக்கட்டுரைகள் (சமஸ்) - புத்தக மதிப்புரை
"லண்டன்" இந்த பெயரை ஒரு நூல் தாங்கிக்கொண்டிருக்க, என் கண்கள் அந்த அட்டைப்படத்தை உற்றுநோக்கியபடியே இருந்தது.
புத்தக திருவிழாவின்போது நான் பரவலான பார்வையை நூல்கள் மீது வீசுகையில் என் கண்ணில் ஏனோ இந்த பயணக்கட்டுரைகள் முன்னிடம் பிடிக்கின்றன.
அத்துடன் வெறும் சுற்றுலா சார்ந்ததாக மட்டுமே இல்லாமல் ஒரு பயணநூல் குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசியல்,வரலாறு,தொழில்நுட்பம்,பொருளாதாரம்,கல்வி,சுகாதாரம
என்று அத்தனையையும் உள்ளடக்கிய களஞ்சியமாகிறபோது,அத்தகைய பயண நூலை வாசித்தே தீரவேண்டிய பெருந்தாகம் என்னை இந்த நூலை வாங்கவைத்துவிட்டது.
அதிலும் தி இந்து தமிழ்திசையின் ஆகச்சிறந்த பத்திரிகை எழுத்தாளர் சமஸ் என்ற பெயரை பார்த்தப்பின் யோசிப்பதற்கு அவசியமில்லை என்று எனக்கு தோன்றிவிட,
இந்த நூலின் வாசிப்பு எனக்கு அவசியமாய்பட்டது.
"லண்டன்" நூலை வாசித்த உடனேயே நான் எழுத்தாளருக்கு அனுப்பிய (email) ஒரு சிறு நூல் மதிப்புரையை இங்கே வழங்கியுள்ளேன்.நீங்களும் இதை வாசித்துவிட்டு கண்டிப்பாக "லண்டன்" நூலை வாங்கி வாசியுங்கள்.நூலை வாசித்து முடிக்கையில் நீங்கள் நிச்சயம் முதலாளித்துவ
லண்டனின் ஜனநாயகப்பிரேமைக்கு ஆளாவீர்கள்.
****************
email sent to writer samas :
வணக்கம் அண்ணா,
உங்களின் "லண்டன்" பயணக்கட்டுரை நூலை வாசித்து முடித்த கையோடு இந்த மெயிலை நான் டைப் செய்கிறேன்.
உங்கள் எழுத்தோட்டமும் அதிலுள்ள உணர்வோட்டமும் பின்னிப்பிணைந்து என்னை லண்டன் வீதிகளில் உலாவவிட்டு சிலிர்ப்பூட்டியதை நினைத்து நெகிழ்கிறேன்.
பாராளுமன்ற சதுக்கத்தருகே காந்தி சிலைக்கு கொண்டு சென்ற மலர்ச்செண்டை ரெயின்-இற்கு அர்ப்பணித்து அழகுபார்த்த உங்கள் மனிதம் எனை கவர்ந்தது.
அத்துடன் லண்டனின் கிராமவாழ்க்கை, வேளாண்மை சார்ந்த சிந்தனைகள் கொள்கை உருவாக்கத்தில் மேற்கொள்ளவேண்டிய மாற்றம் குறித்தெல்லாம் சிந்திக்கத்தூண்டியது.
பிரெக்சிட் பற்றிய என் சொற்ப அறிவை உங்கள் எழுத்து விரிவுக்குள்ளாக்கியது.
பல முகங்கள் ஒரு வரவேற்பு என்று நீங்கள் லண்டனை அறிமுகப்படுத்திய விதமே அலாதி ஈர்ப்பினை என்னுள் உண்டுபண்ணியது.
சிட்டி ட்ரீ, தேம்ஸ் மீட்டுருவாக்கம்,பிரிட்டன் ஆட்சிப்பதவிகளில் ஆசியர்கள்,
போராட்டக்களமாய் மாறிப்போகும்
டிரஃபால்கர் சதுக்கம்,
லண்டன் வீதி உணவுகள்,லண்டனில்
சைக்கிளின் பங்கினை ஆம்ஸ்டர்டாமோடு பொருத்தி எழுதியமை யாவுமே என் நெஞ்சில் படமாய் ஓடுகிறது.
ஆகச்சிறந்த கல்வியும் சுகாதாரமும் ஒரு நாட்டின் ஆனிவேர் என்பதைக்காட்டும் வண்ணம் என்ஹெசெஸ் ராயல் லண்டம் எமெர்ஜென்சி ஹெலிக்காப்ட்டர்,
பெருந்தலைவர்களை உருவாக்கிய
ஆக்ஸ்போர்ட் ,
பிரிட்டனின் அரசுப்பள்ளிகளின் தரம் , பொதுவீடுகள் திட்டத்தின் மூலம் வாழ்வாதார ஊர்ஜிதத்தை மக்களுக்கு அளிக்கும் பாங்கு கிட்டத்தட்ட பெரியாரின் சமத்துவபுரம் போல தோன்றினாலும் இந்து உலகளாவியபுரமாக எனக்கு தோன்றியது.
எனக்கு மேலும் தாக்கங்களை ஏற்படுத்திய கட்டுரைகள் யாதென்றால்,நீங்கள் கடைசி அத்தியாயத்தில் செய்த உரையாடல்கள்,
அதிலும் இலங்கை தமிழரின் இலண்டன் பற்றிய பார்வையும்,பெயரிலியாகிய புலம்பெயர் அகதியரின் மனநிலையும்,நீங்கள் லண்டனின் கிராமங்களைக் குறித்து ஹெலனுடன் நிகழ்த்திய உரையாடல் யாவுமே லண்டன் பற்றிய ஒரு தெளிவான அபிப்பிராயத்தை சுவீகரிக்க உதவியது.
உண்மையில்,
லண்டன் மீதான தங்கள் பார்வையை,
என் கண்ணாடியாக்கி நம் நாட்டினை நான் கூர்ந்து நோக்கும்போது என்னால் வேறுபாடுகளை புரிந்து கொள்ளமுடிகிறது,
நம் பின்னகர்வுக்கு காரணமாகிய காரணிகளை அடையாளம் காண ஏதுவாகிறது.
மேற்கொண்டு ஒரு குடிமகனாய் இருக்கும் ஒருவன் ஆட்சிப்பதவிக்கு சென்றால் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற கொள்கை உருவாக்க சூத்திரத்தை இதன்மூலம் ஓரளவேனும் உள்வாங்கிக்கொள்ளமுடிகிறது.
ஆழமான பயண கட்டுரைகள்.
நன்றி சமஸ் அண்ணா.
இப்படிக்கு,
தங்கள் அன்பு வாசகத்தங்கை,
சிவநிறைச்செல்வி
Comments
Post a Comment