ஹார்வார்டு நாட்கள் - நூல் மதிப்புரை


ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தன் கைப்பட எழுதிய ஒரு அனுபவ நூலை வாசிக்கும் அவா எனக்கு பல வருடங்களாக இருந்ததுதான்.

 பிரசாந்த் நாயர் ஐ.ஏ.எஸ் எழுதிய "Collector Bro" நூல் &
அஷோக் பாண்டே ஐ.ஏ.எஸ் எழுதிய "From Inside the Steel Frame" ஆகிய நூல்களை மின் நூல் வடிவத்தில் ஆங்கிலத்தில் படித்தேன்.அதிலும் இரண்டாம் நூலை என்னால் முழுமையாக முடிக்கமுடியவில்லை.

ஏனோ இந்த மின் நூல்களில் தொடர்ச்சியாக வாசிப்பது கண்சோர்வை அளிக்கிறது.

ஆனால் தமிழில் எனக்கு எளிதில் இது போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அனுபவ நூல்கள் கிடைக்கவில்லை.அல்லது நான் அதிகம் தேடாமல் விட்டிருக்கிறேன் போலும்.

ஆனந்தவிகடனின் "சகாயம் சந்தித்த சவால்கள்" நூலை முழுமையாக நான் வாசித்தபோது எனக்கு இந்த வேட்கை இன்னும் தீவிரமானது.

உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் எழுதிய "மாபெரும் சபைதனில்" நூல் எனக்கு கிடைத்தது.தொடர்ச்சியாக என் தேடல் இன்னும் வேண்டும் என்று என்னுள் பெருயாகத்தை நிகழ்த்த துவங்கியது.

அப்படி என் தேடலுக்கு தீனிபோடும் விதமாக என் கைவந்து சேர்ந்த நூல்தான் இந்த "ஹார்வார்டு நாட்கள்".

இரா.செல்வம் ஐ.ஏ.எஸ் அவர்கள் அரியலூரில் ஒரு சிறு கிராமமாகிய அய்யப்பநாயக்கன்பேட்டையில் பிறந்து இமயமலை சிகரத்தை அடைந்த ஒரு சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.

இமாச்சல பிரதேசத்தின் லாகுல் ஸ்பிட்டி மாவட்ட ஆட்சியராக தான் பணிபுரிந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும்.அவர் பணியாற்றிய உள்துறை ,உரத்துறை அமைச்சகத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் தன் அமெரிக்க வசிப்பின் போது அசைபோடுகிறார்.

தன் சுயமுன்னேற்றத்திற்காகவும் நாட்டின் வளர்ச்சியின் மீது அவர்கொண்ட பேரவாவும் தான் அவரை ஹார்வார்டு நோக்கி செலுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் சாலை விதிகள் தொழில்நுட்ப உதவியுடன் விபத்துகளை தவிர்க்கும் விதம்,டிராபிக் போலீஸ் அற்ற அந்த சாலைகளில் மக்களின் விழிப்புணர்வு பற்றியெல்லாம் விவரிக்கிறார்.இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்தின் புள்ளிவிவரத்தோடு சாலை விதிகள் பற்றிய நம் அலட்சியத்தனத்தையும் சுட்டி வேதனைப்படுகிறார்.

ஒரு அதிகார மையத்தில் இருக்கும் அவரே தன் பிள்ளைகளை டில்லி உயர்தர பள்ளிகளில் சேர்ப்பதற்கு படுகிற பாட்டினை விவரித்து,பின் அமெரிக்க பள்ளிகளோடு இதை ஒப்பிடுகிறார்.நட்புணர்வுடன் பழகும் ஆசிரியர்கள்,
பள்ளியில் சேர்க்கும் விதிமுறைகளை மிக எளிமையாக்கி மாணாக்கரின் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அமெரிக்க பள்ளி நிர்வாகம் அவரை நெகிழ்விக்கிறது.

நூலகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து,மாணவர்களை கேள்விகள் கேட்கத்தூண்டும் ஆசிரியர்களால் தான் அமெரிக்கா பல விஞ்ஞான வளர்ச்சியை கண்டுள்ளது.

தசைநார் தேய்வு நோயால் பாதிக்கப்பட்ட தன் மாமனார் சில வருடங்களில் இறந்ததையும்,அதே நோயால் பாதிக்கப்பட்ட Stephen Hawking என்ற விஞ்ஞானி பல ஆண்டுகள் வாழ்ந்தார்.காரணம்,மருத்துவ உள்கட்டமைப்பு வசதி.அத்தகு தொழில்நுட்ப முன்னேற்றம் இன்னும் ஏன் இந்தியாவில் வரவில்லை என்று ஆதங்கப்படுகிறார்.அதன் தீர்வாக ஆராய்ச்சித்திறைக்கு அதிகமான தொகை ஒதுக்கீடு செய்து, மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தும்வண்ணம் கல்வித்தரம் உயரவேண்டும் என்கிறார்.

நீர்சேமிப்பு விவசாய முறைகளான சொட்டு நீர் பாசனம், ராட்சத நீர்தெளிப்பான்கள் , வேளாண் மானியம்,மதிப்புக்கூட்டலுக்கு அதிக மானியம் தந்து ஏற்றுமதிக்கு வித்திடல், மண்டல வாரியான அறுவடைக்குப்பின்னான சந்தைகள், அரசின் பயிர்களுக்கான msp (குறைந்தபட்ச நியாய விலை) சந்தை விலையைவிட அதிகமாக இருத்தல் &mspயை எண்ணெய் வித்துகள்,பயிர் வகைகளுக்கும் அறிவித்தல்.
பழங்கள் ,காய்கறிகளுக்கான
குளிரூட்டு அறைகள், விவசாய கடன் தள்ளுபடி போன்ற எண்ணற்ற விவசாய கொள்கைசார் விடயங்களை ஒப்பீட்டுடன் விவரித்துள்ளார்.

நிலப்பத்திரங்கள் பல துறைகளின் கீழ் இயங்குவதற்கு பதிலாக ,ஒரு துறையின்கீழ் கொண்டுவரப்படுதல்.நிலம் வாங்குவோரின் உண்மைத்தன்மையை ஆராய்தல்.பத்திரப்பதிவில் ஏதேனும் தவறு நிகழ்ந்திடின் அரசே அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளல் போன்ற முறைமைகள் அமெரிக்காவிடம் நாம் கற்கவேண்டியது என்கிறார்.


அமெரிக்க நியூயார்க் நகரத்தின் நகர்ப்புற திட்டமிடல்,தெருக்கள் & பூங்கா அமைப்பு, 1920களிலேயே சுரங்க ரயில்சேவை,கப்பல் & ரயில் கட்டுமான வளர்ச்சி,கட்டிட சட்டங்கள்.1920களின் நிலநடுக்கம்,1945 லட்சக்கணக்கான குண்டுவீச்சுகள் ஆகிய பெரும்தாக்குதலுக்குப் பின்னும் டோக்கியோ நகரம் இன்று கம்பீரமாய் வளர்ந்துள்ளது,டோக்கியோவின் சிறந்த வெள்ள நீர் வடிகால்முறை,நிலத்தடி நீர் திட்டங்கள்,மெட்ரோ ரயில்சேவை அத்துடன் ஜப்பான் மக்களின் ஒற்றுமையான உழைப்பு இதெல்லாம் தான் சிறந்த நகரங்களை உருவாக்குகிறது என்ற செய்தியோடு, சிங்கப்பூரின் சிறந்த வெள்ளநீர் வடிகால் இரட்டை சுரங்கப்பாதையை எடுத்துக்காட்டியுள்ளார்.

நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென்-ஐ சந்தித்தபோது ,உதவியாளர் கூட வைத்துக்கொள்ளாத அவரின் எளிமையைக்கண்டு இதை நம் அதிகார மையம் கற்கவேண்டியவற்றுள் ஒன்று என்கிறார்.

 கனடா,அமெரிக்கா இடையே இருக்கும் கொலராடோ நதிநீர்பிடிப்புச்சட்டத்தை நம் காவிரி பிரச்சனையோடு பொறுத்தி, எந்த பிரச்சனைக்குமே பேச்சுவார்த்தையில் தீர்வு காண இயலும் என்ற அமெரிக்க வல்லுநர்களின் தீர்க்கமான எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வ்யோமிங்க் மாவட்டத்தின் yellow stone national park,,அரிசானோ மாவட்டத்தின் கொலராடோ நதி பாயும் grand canyon பள்ளத்தாக்கு ஆகியவற்றுக்கு சுற்றுலா செல்லும் இவர் தன் இமாச்சல பிரதேச லாகுல் ஸ்பிட்டியின் சுற்றுலா வாய்ப்புகளை ஒப்பிட்டு பார்க்கிறார்.அமெரிக்கா போலவே இமாச்சல பிரதேசத்திலும் சுற்றுலா சார்ந்த கட்டமைப்புகளை வலுப்படுத்தி,உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பினையும்,வெளிமாநில வெளிநாட்டின் முதலீட்டினையும் அதிகப்படுத்தவேண்டும் என்கிறார்.

இமாச்சல பிரதேசத்தின் லாகுல் ஸ்பிட்டி மாவட்டத்தில் தான் பணிபுரிந்தபோது , அங்கு அவர் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம் என்று புரிகிறது.இப்போது போல 15 ஆண்டுகளுக்கு முன் அடல் சுரங்கப்பாதை இல்லை.ரோஹ்தாங் பாஸ் பனிச்சரிவால் மூடப்பட்டபின் உள்ளூர் மக்களுக்கான அவசர உதவிகள் கூட மாவட்ட நிர்வாகத்தால் ஹெலிக்காப்டரில் தான் செய்யமுடியும் என்றும்.சீரான நிலம் அதிகமற்ற அப்பகுதியில் ஒரு பெண் பல ஆண்களை மணமுடிக்கும் நிலை உள்ளமையும்,
அம்மக்கள் ஒரு வருடத்தில் 6 மாதங்களே இயங்கமுடியும் மீதம் 6 மாதங்கள் குளிர்காலங்களில் வீட்டினுள் முடங்கிக்கிடக்கவேண்டும், அத்துடன் உணவு,உருளைக்கிழங்கை பள்ளங்களில் பதுக்கி பயன்படுத்துவதும்.உணவுப்பொருள்,மருந்துப்பொருட்களை மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் உள்ள சூழலியல் சிக்களையும் விவரித்துள்ளார்.

ஆப்பிள்,அமேசான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவிலும் நிறுவப்பட நாம் இன்னும் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பட்டியலிடுகிறார்.ராகுகாலம் பார்த்தி ராக்கெட் விடும் இந்தியாவின் மூடநம்பிக்கைகள் ஒழியவேண்டும்.சாதியம்,மதம் என்று தேவையற்ற சடங்குகளல்
 பீடித்திருக்கும் நம் நாடு எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகும் தன்மையை வளர்க்கவேண்டும் என்கிறார்.எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும் குழந்தையை நாம் அதட்டுகிறோம்.மாறாக,கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிப்பதே ஒரு அறிவார்ந்த மானுடத்தை உருவாக்கி ஆராய்ச்சி நோக்கி உந்தித்தள்ளும்.
எதற்குமே கேள்வி கேட்க பயப்படுவதால் தான் நாம் சமூக அநீதிகளை சகித்துக்கொண்டு வாழப்பழகுகிறோம்.

மூடநம்பிக்கை ஒழிந்த அறிவியல் அடிப்படையிலான சமுதாயத்தை உருவாக்கி உலக சமத்துவத்தை நிலைநாட்டுவதே நம் ஒவ்வொருவரின் கடமை என்று தன் பெருங்கனவின் சுமையை இளைய சமுதாயத்திடம் ஒப்படைத்து நிறைவுசெய்துள்ளார் இரா.செல்வம் ஐ.ஏ.எஸ் அவர்கள்.

சிவநிறைச்செல்வி

Comments

  1. Crisp and catchy wordings by Sivaranjani 👏
    I had a great idea about the book and your review about it stimulated me to read more books like that.
    Post more reviews about more books so that rare book readers like me 😁 can avail more knowledge and general learning skills

    ReplyDelete

Post a Comment

Popular Posts