நூல் மதிப்புரை - ( இலங்கை எழுதி தீரா சொற்கள்)


சமீபத்திய வருடங்களில் நாடுகளின் வரலாறு,உலகப்பயணம் பற்றிய புத்தகங்களை தேடி வாங்கி வாசிப்பதில் நான் மும்முரம் காட்டுகிறேன்.
அவ்வாறே இவ்வருடம் என் தேர்வாக இருந்த நூல்தான்,

"🇱🇰 இலங்கை எழுதி தீரா சொற்கள்" (எழுதியவர்- ரமாதேவி ரத்னசாமி)

எழுத்தாளர் தமது முன்னுரையில் இந்நூல் பெரிதாக இலங்கை பயணம் பற்றியது என்பதைவிட ,  ஈழம் பற்றிய வரலாற்று வடுக்கள்
தம்முள் ஏற்படுத்திய வலியின் தாக்கம் என்றே அறிமுகப்படுத்துகிறார்.

தன் பள்ளிகாலத்தில் ஈழப்போருக்காக அறிவித்த விடுமுறைகளை எல்லா சிறாரைப்போலவே கடந்துவிட்ட இவர்,இலங்கை வானொலி காலங்களில் தமக்கு ஏற்பட்ட அழகான அனுபவங்களை அடுக்குகிறார்.இலங்கையின் திரை நட்சத்திரங்கள் பற்றி விவரித்தவர் மக்கள் திலகம் , பாலுமகேந்திரா வரிசையில் இன்றைய லாஸ்லியா வரை பேசியிருக்கிறார்.அத்துடன் லாஸ்லியாவின் தமிழ் - கொழும்புத்தமிழ் , கன்னத்தில் முத்தமிட்டால் நந்திதா தாஸ் தமிழ் - வன்னித்தமிழ் என்று இலங்கைத்தமிழின் வகைமையை விவரிக்கிறார்.

இந்துமகாசமுத்திரத்தின் பாக்ஜலசந்தி,தலைமன்னார்,சேது சமுத்திர திட்டம்.,இலங்கையின் தற்போதைய வர்த்தக சூழல் மற்றும் சோழர்காலத்து கப்பல் போக்குவரத்து,  போர்ச்சுகீசிய,டச்சு,பிரிட்டன் படையெடுப்புகள்வரை பிரித்து மேய்ந்திருக்கிறார்.அதன் சாட்சியாக அவர் கண்ட டோரிக் கோட்டை,பிரட்ரிக் கோட்டை போன்றவற்றை கூறுகிறார்.

இன்றைய இலங்கையின் உணவுகளான கொத்து ரொட்டி ,பிட்டு வகைகள், சம்பல்,அப்பம் போன்றவற்றை இவர் விவரிக்கும் விதமே ஆர்வத்தை தூண்டுகிறது.

ஈழம் என்பது இலங்கை முழுமைக்குமான பெயர் என்றும்.அதற்கு சான்றாக முத்தொள்ளாயிரம்,பட்டினப்பாலை பாடல்களை எடுத்துக்காட்டுகிறார்.
இலங்கையில் இரண்டே இடங்களில் காணப்படும் அதிசய பெருக்குமரம் பற்றிய விரிவுரை ,எனக்கே அந்த மரத்தை ஆரத்தழுவிக்கொள்ள ஆசைவருவித்தது.


கிளினொச்சியின் ஆனையிறவு,மருதமடுமாதா கோவில்,யாழ்ப்பாண நூலகம்,
முள்ளிவாய்க்கால்,வெலிக்கடை சிறைச்சாலை ஈழப்போர் இனப்படுகொலைகளை வாசித்தபோதே அவ்வெழுத்தின் பாரத்தை என்மேல் ஏற்றிவிட்டார் எழுத்தாளர்.
ஆம், போர்விமானங்கள்,ஷெல் எரிப்பு,துவக்கு,கண்களை பிடுங்கி கால்களால் நசுக்கி கொன்றமை,பாலியல் வன்கொடுமை,உயிருடன் எரிக்கபட்ட ஆடையின்றி கதறிய மனிதன், கறுப்பு ஜூலையும் மே18-ம்  என்று சிங்களப் பேரினவாதிகள் இலங்கை இராணுவத்தின் துணைகொண்டு நிகழ்த்திய கோரதாண்டவத்தை நேரில் கண்ட மனிதர்களின் வார்த்தைகளால் வலியோடு பதிவிட்டுள்ளார்.

புலம்பெயர் ஈழத்தமிழரின் குடும்பமின்றி வாடும் உள்ளத்தவிப்பினையும்,ஈழத்து மக்களின் கல்வி,சிங்கள மொழி ஆதிக்கம்,மருத்துவம்,அரசு வேலை,திருமண வாழ்க்கை,சாதியம்,சைவ பெளத்த முரண்கள்,ஆணாதிக்கம்,பாலுக்கு பதிலாக பால்பவுடரில் வாழும் குழந்தைகள் என நம் தமிழினத்தின் மொழிபடுத்தமுடியா பெருவலிகளை முடிந்தமட்டும் காகிதத்தில் கொண்டுவர முயன்றுள்ளார் எழுத்தாளர்.

புத்தரின் பல் கோயில் (கண்டி),தங்கக்கோயில் (தம்புளா),சிம்மகிரி (சிகிரியா),சீதா எலிய ( நுவர எலியா),கோணேஸ்வரம் & திருக்கேதீஸ்வரம் ,இன்னபிற பஞ்ச ஈஸ்வரம்....,
என்று இலங்கையின் சுற்றுலா தளங்களை அழகுற புராண / வரலாற்றுப் பின்புலத்துடன் கொடுத்துள்ளார்.


சோழர்களின் தலைநகரமாக விளங்கிய அனுராதபுரம் (புத்தர் மகள் சங்கமித்திரை நட்ட போதிமரமுள்ள இடம்), பொலன்னறுவையின் சோழர்கால கல்வெட்டுகள், இயற்கை எழில் மிகுந்த நாகத்தீவு எனும் நயினார் தீவு,மாதோட்டம் எனும் ராஜராஜேஸ்வரம் பற்றி வந்தியத்தேவனின் கண்வழி நின்று கல்கியின் வர்ணனையில் வழங்கி வாசிப்போரை சோழர்கால ஈழத்துக்கு கூட்டிச்செல்கிறார்.

மத நல்லிணக்க அடையாளங்களாக
கண்டியின் மழைவேண்டி பெரஹரா திருவிழா;
ஆதாம் மலை / தோமஸ் மலை / ஸ்ரீபாதம்/சிவனொளிபாதமலை என்கிற சமத்துவமலையின் - ஆகியவற்றினம மர்மமான புராணமும் சடங்குகளும் என
எழுத்தாளர் எல்லா தளங்களையும் தொட்டுவிட்டிருக்கிறார்.

இந்த நூல் ஈழத்திற்கான ஒவ்வொரு தமிழச்சியின் பொதுக்குரலாக ஒலிக்கிறது.ஈழத்தாயின் சகல சுவரூபத்தையும் இவர்தம் நூலின் மூலம் தரிசிக்கமுடிந்தது.



மனத்தின் கனம் தாளாது 😭செரிக்கமாட்டாத தமிழீழக்கதைகளை வாசிக்கவே திணறி  இடைவெளிகள் விட்டு விட்டு மூன்று நாட்கள் எடுத்து வாசித்து முடித்தேன் இப்புத்தகத்தை.

எம் தமிழினத்தின் ரத்தக்கறை வாடையும், ஈழத்து உப்புக்காற்றும் , மலையகத்தமிழரின் ஆடையில் ஊறிப்போன தேயிலை வாசமும்
நூற்றாண்டுகள் புதைந்து முளைத்த பவழப்பாறையென என் எலும்புகளோடு ஊறிவிட்டது.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் வாசிக்குமாறு இயல்பாய் அமைந்துள்ளது இவரது எழுத்துநடை.ஒரு பெருவரலாற்றை அதன் பயணத்தை ஆங்காங்கே நகைச்சுவை உணர்வு,கோபம்,மைண்ட்வாய்ஸ் என கலந்துகட்டி எளிமையாக உள்ளது இந்த நூல்.

கட்டாயம் வாசியுங்கள்.

"🇱🇰 இலங்கை எழுதி தீரா சொற்கள்" என் பார்வையில் ரமாதேவி ரத்னசாமியின்,

 "இலங்கையின் ரத்தினச்சுருக்கம்" எனுவேன்.

நன்றி.

-சிவநிறைச்செல்வி

Comments