மகரிஷியும் பெஸ்கியும்
*மகரிஷியும் பெஸ்கியும்*
நான் மகரிஷியை காண்கிறேன்.மஞ்சள் துண்டை தோளில் போட்டிருந்த அவரின் வெண்மையான உடுப்பு அவரின் ஒளிமயமான முகத்தின் பிரதிபலிப்பில் மின்னியது.அவரின் நீண்ட வெண்ணிற தாடி அவரை ஒரு அனுபவத்தில் சிறந்த வயோதிக மகானாக காட்டியது.
அந்த தோற்றம் என்னை மெய்சிலிர்க்கவைக்கிறது.அவரை நான் பார்க்கிறேன்.அவரிடமிருந்து சிறு இடைவெளியில் நான் அவர் முன் நின்றுகொண்டு அவரை நோக்கியபடி இருந்தேன்.
சற்று நேரத்தில் அவரிடம் நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன்.
"மகரிஷி...! ஐக்கிய நாடுகள் சபைக்கு போனீங்களே என்னாச்சு?"
என்று கேட்கிறேன்.அவர் பதிலுரைக்கவில்லை.மறுபடி ஆர்வமிகுதியில் "மகரிஷி! ஐக்கிய நாடுகள் சபைல பேசனீங்களா? என்னாச்சு?" என்று இரண்டாம் முறையாக கேட்கிறேன்.
மகரிஷியின் மவுனமே எனக்கு பதிலாகியது.அவரின் இதழ்கள் அசையவில்லை.அவரின் விழிகளில் ஏதோ ஒரு கோபம் இருப்பதை உணர்ந்தேன், தீராத ஓர் ஏக்கத்தை அவர்தம் பார்வையில் கண்டுணர முடிந்தது.
என்ன இது? மகரிஷி நம்ம கேள்விக்கு பதில் சொல்லவேமாட்ராரு.
ஏன் இந்த மவுனம்,ஏன் என் கேள்விக்கு அவர் மீண்டும் மீண்டும் மவுனத்தையே தருகிறார்.என் மனம் குழம்பியது.நான் ஏதும் தவறாக கேட்டுவிட்டேனா?
திடீரென்று மகரிஷி அருகில் ஒரு புத்தகம் தோன்றியது.மகரிஷி அந்த புத்தகத்தின் மீது தன் பார்வையை செலுத்தினார்.உடனே மீண்டும் என்னை பார்த்தார். மகரிஷியின் அருகில் இருந்த அந்த புத்தகம் என்னை பார்த்து நிமிர்ந்த வண்ணம் தன் அட்டைப்படத்தை காட்டியது.அந்த புத்தகத்தின் பெயர் இப்படி எழுதியிருந்தது,
"Henry Joseph Besky".
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
உடனே அந்த புத்தகம் என்னிடம் பேசியது.
" என்னை நீ படிக்கவேண்டும்,என்னைப் பற்றி முழுவதும் இதை வாசித்து அறிந்துகொள்!" என்றது அந்த புத்தகத்தின் அசரீரி.
திடீரென்று அப்புத்தகத்தின் அருகில் ஒரு ஆவி போன்ற உருவம் தோன்றியது.வெள்ளை சட்டை அணிந்து அதன்மீது கருப்பு நிற கோட் உடுத்தியிருந்தது அந்த தோற்றம்.பார்ப்பதற்கு ஒரு ஐரோப்பியர் போன்ற தோற்றம் இருந்தது.அந்த விநோத தோற்றம் என்னிடம் பேசத்தொடங்கியது,
"நீ என்னைப் பற்றி வாசித்து அறிந்துகொள்.நான் இப்பூமியில் செய்து முடிக்கவேண்டிய காரியம் ஒன்றுள்ளது.என் வேலையை எனக்கு நீதான் செய்துமுடித்து தரவேண்டும்.நான் விட்டுவைத்த பணியை நீ நிறைவு செய்வாயாக!" என்று என்னிடம் பேசியது எந்த ஐரோப்பிய தோற்றம்.
அத்தோற்றம் பேசிக்கொண்டிருந்தபோதே என் பின் ஏதோ ஒரு நாயின் வால் துரத்திக்கொண்டே வருவது போன்று தோன்றி பின்னே திரும்பி பார்த்தேன்.நான் திரும்பி பார்க்கும்போதெல்லாம் அந்த நாயின் வால் மாயமாக மறைந்துவிடுகிறது.
இதைப் பார்த்த அந்த ஐரோப்பிய மனித உருவம் என்னிடம் இது நான் எழுதிய தேற்றத்தில் ஒன்றாகும்.நீ ஒரு கற்பனைக்கு வலுக்கொடுக்கும்போது அது இப்படியான விளைவுகளை தருகின்றன.கற்பனை மற்றும் எண்ணங்களை நாம் கண்காணித்து எளிதில் கட்டுப்படுத்தினால் இது போன்ற வேடிக்கை நிகழாது என்று கூறியபோது எனக்கு ஒன்றுமே புரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன்.
என்னை சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது?
மகரிஷியை நோக்கிய என் கேள்வி.
மகரிஷியின் மவுனம்.
புத்தகத்தின் அசரீரி.
ஐரோப்பிய மனித ஆவியொன்றின் வேண்டுகோள்.
***********************
14/09/2025 ஞாயிறு காலை 4.30 மணி வாக்கில் எனக்கு தோன்றிய கனவின் வெளிப்பாடே இங்கு நான் பதிவிட்டுள்ளேன்.
*************************
கனவு கலைந்தபின் நான் என் தேடலை முடுக்கினேன்.
என் கனவில் வந்த பெயரில் ஒரு சிறிய மாற்றம் "Constantine Joseph Beschi".ஆம் என் கனவில் வந்த அந்த புத்தகத்தின் பெயர் இதுதான் என்று என் உள்ளுணர்வின் மூலம் உறுதிசெய்துகொண்டேன்.
யார் இந்த Constantine Joseph Beschy?
அவர்தான் வீரமாமுனிவர் ஆவார்.
இத்தாலிய அறிஞரான இவர் சதுரகராதி, தேம்பாவனி நூல்களை இயற்றியவர்.
அவர் தமிழினின்று ஆங்கிலம்,லத்தீன், கிரேக்கத்திற்கு பல மொழிபெயர்ப்புகளை செய்துள்ளார்.
தமிழின் தேவாரம்,திருப்புகழை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
அத்துடன் ஐரோப்பிய கிறித்துவ கோட்பாடுகளை தமிழ்படுத்தியுள்ளார்.
வேதாத்திரி மகரிஷி ஆன்மிக குரு ஆவார்.அறிவுத்திருக்கோயில் அமைத்து உடற்பயிற்சி, யோகமுறைகள் மூலம் இறைவனை அனுபவிக்கும் வழிகளை ஆராய்ந்த பேரறிஞரும் ஞானியும் ஆவார்.
வீரமாமுனிவர் தமிழகராதி மற்றும் ஆன்மிக நூல்களை பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தவர் ஆவார்.
, " ஐக்கிய நாடுகள் சபைக்கு போனீங்களே,என்னாச்சு? ஐக்கிய நாடுகள் சபையில பேசனீங்களா?"
மகரிஷியை நோக்கிய என் இந்த கேள்விக்கு இந்த கனவின் விடை இன்னும் என் உள்ளுணர்வின் ஆய்வுக்குரியதாகிறது.
இயல்பிலேயே தமிழ் நூல்களை மொழிபெயர்ப்பு செய்வதிலும்,மற்ற மொழி நூல்களை தமிழ்படுத்துவதும் என் மாபெரும் கனவாகும்.அத்துடன் மதம்சாராத ஆன்மிக ஞானத்தை பாரெங்கும் பரப்பவேண்டும் என்ற எனக்கு எட்டாத மிக உயரிய கனவும் எனக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதற்கான தகுதிகளை நான் இன்னும் அடையவில்லை.
பிரபஞ்சமே மிகப்பெரிய ஆற்றல்களம் ஆகும்.
நம் எண்ணங்களின் உயர்வுக்கேற்ப அது நம்மிடம் பேசும்.
பிரபஞ்ச வெளியில் பரந்துவிர்ந்துள்ள இந்த பேராற்ற காந்தக்களத்தில் பெரும் அறிஞர்கள் மகான்கள் யோகியர் ஞானியர்கள் தலைவர்களின் செயல்திட்டங்கள் என்று உயிர்புடன் ஆற்றல் நிலையில் பதிந்து பரவிக்கிடக்கும்.
நம் எண்ணமே இந்த ஆற்றல் களத்தை தொடும் ஆண்ட்டெனா.
இந்த ஆண்ட்டெனாவின் தொடர்பு நம்மிடம் கனவுகள்,அமானுஷ்ய நிகழ்வுகள்,அன்றாட அனுபவங்க்ள்,வாசிப்புகள் இப்படி எதன் மூலமேனும் நம்மிடம் பேச முயலும்.சரியான ஆன்மிகப்பயிற்சியும்
கருணையும் நன்றியுணர்வும் மேலெழும்போது இன்னும் இன்னும் இவர்கள் நம்மை தொடர்புகொள்வார்கள்.
இப்படியான இந்த சிந்தனைகள் எல்லாம் வேதாத்திரி மகரிஷியின் ஏதோ ஒரு யூட்டியூப் ஆன்மிக வகுப்பில் சில வருடங்களுக்குமுன் கேட்டதாக ஒரு ஞாபகம்.
உள்ளூரமாக ஆயிரம் ஆயிரம் இதுபோன்ற எண்ணங்கள் என்னுள் கிளைத்துக்கொண்டே இருந்தது.
இது எதற்கும் எனக்கு தெளிவான விடை புரியவில்லை.
ஆனால் ஒன்று நிச்சயம்.
பிரபஞ்சம் இந்த உலக சமுதாயத்திற்கான தன் மகத்தான வேலைகளை என்னை கருவியாக்கி செய்துகொள்ளும் நாளுக்காக நான் தயாராகிக்கொண்டிருக்கும்படிக்கு என்னை இயற்கை பேராற்றல் என்றென்றும் ஆசிர்வதிப்பதாகுக!
சிவநிறைச்செல்வி
Comments
Post a Comment